Published : 10 Jan 2022 11:19 AM
Last Updated : 10 Jan 2022 11:19 AM
கரோனா தடுப்பு முழு ஊரடங்கை அடுத்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நேற்று சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, வார நாட்களில் இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
மதுரை நகரில் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர். மருத்துவமனை, திருமணம், போட்டித் தேர்வுக்கு சென்றோர் உரிய ஆவணங்களை காட்டிய பிறகு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மாசி வீதிகள், வெளி வீதிகள், முக்கியச் சாலைகள், சந்தை மற்றும் பேருந்து நிலையப் பகுதிகள் வெறிச்சோடின. கோரிப்பாளையம் சிக்னலில் தேவையின்றி வாகனங்களில் சுற்றிய நபர்களுக்கு குடுகுடுப்பைக்காரர் மூலம் நூதன முறையில் போலீஸார் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரை புறநகர் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டனர். ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர், வில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்தூர், ராஜபாளையம், சிவகாசியில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. வாடகை கார்கள், லாரிகள், ஆட்டோ போன்றவை இயங்கவும் தடை விதிக்கப்பட்டது. ரயில் பயணிகள் வசதிக்காக மட்டும் ரயில் நிலையங்களில் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. பேருந்து நிலையங்கள், சந்தைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மருத்துவ மனைகள், மருந்தகங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. பால் மற்றும் தண்ணீர் கேன்கள் விநியோகம் வழக்கம்போல் நடந்தன. மாவட்டம் முழுவதும் முக்கிய பகுதிகளில் போலீஸார் ரோந்து சென்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மருந்தகம், உணவகம், பால் விற்பனை தவிர, மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ராமேசுவரம், தனுஷ்கோடி, திருப்புல்லாணி, தேவி பட்டினம், திருஉத்தரகோசமங்கை உள்ளிட்ட கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
வாகனப் போக்குவரத்துடன் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பாம்பன் சாலை பாலம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் சோதனைச்சாவடியில் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான வரு வாய்த்துறையினர் மற்றும் போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். தேவையின்றி வாகனங்களில் சுற்றி திரிந் தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
சிவகங்கை
சிவகங்கை, மானாமதுரை, தேவ கோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், இளையான்குடி, திருப்புவனம் உட்பட அனைத்து பகுதிகளிலும் மருந்தகம், ஹோட்டல் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் முழு மையாக அடைக்கப்பட்டிருந்தன. சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். மானாமதுரையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு வட்டாட்சியர் தமிழரசன் தலைமையிலான அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல், பழநி, கொடைக்கானல், வத்தலகுண்டு உள்ளிட்ட நகர் பகுதி களில் அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டிருந்தன. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன. உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 1,100 போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் செயல்படும் என கடந்த 2 தினங்களுக்கு முன்பு மார்க்கெட் சங்க நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர். அப்போது ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மார்க்கெட் செயல்படத் தொடங்கியது. விவசாயிகள் காய்கறிகளை மார்கெட்டுக்கு வாகனங் களில் கொண்டு வந்தனர். கூட்டம் அதிகரித்ததை அடுத்து காய்கறி மார்க் கெட்டை உடனடியாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
பழநிக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் தடையின்றி பயணத்தைத் தொடர்ந்தனர். திண்டுக்கல் நகரில் சாலையாரம் வசிப்பவர்கள் மற்றும் பழநி பாத யாத்திரை பக்தர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT