Last Updated : 01 Apr, 2016 07:19 PM

 

Published : 01 Apr 2016 07:19 PM
Last Updated : 01 Apr 2016 07:19 PM

நாகர்கோவிலில் வெற்றியை நிர்ணயிக்கும் கிறிஸ்தவ வாக்குகள்: முதல் வேட்பாளராக பிரச்சாரத்தை தொடங்கிய பாஜக எம்.ஆர்.காந்தி

நாகர்கோவில் தொகுதியில் வெற்றியை கிறிஸ்தவ ஆதரவு வாக்குகளே நிர்ணயிக்கின்றன. எனினும், தொகுதிக்கு நன்கு அறிமுகமான பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி, முதல் நபராக தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

மாவட்டத்தில் கன்னியாகுமரி தொகுதிக்கு அடுத்தபடியாக அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி நாகர்கோவில். இங்கு 2 லட்சத்து 63 ஆயிரத்து 106 வாக்காளர்கள் உள்ளனர். நாடார் வாக்குகள் பெரும்பான்மை வகிக்கின்றன. அதிலும், கிறிஸ்தவர்கள் வாக்குகள் அதிகம். வெற்றி, தோல்வியை மத அடிப்படையிலான வாக்குகளே நிர்ணயிக்கின்றன.

முந்தைய வரலாறு

இதற்கு முன், 1967-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக கிறிஸ்தவ வேட்பாளர்களே நாகர்கோவில் தொகுதியை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1967-ல் திமுக வேட்பாளர் எம்.சி.பாலன், 1971-ல் சுதந்திரா கட்சி சார்பில் டாக்டர் மோசஸ், 1977 மற்றும் 1980-ல் அதிமுக வேட்பாளர் எம்.வின்சென்ட், 1984-ல் திமுக வேட்பாளர் ரெத்தினராஜ், 1989, மற்றும் 1991-ல் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் மோசஸ், 1996-ல் தமாகா சார்பில் எம்.மோசஸ், 2001-ல் எம்.ஜி.ஆர். அதிமுக சார்பில் ஆஸ்டின், 2006-ல் திமுக சார்பில் ராஜன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்தகால தேர்தல் வரலாற்றால் ஒவ்வொரு கட்சியும் தொகுதிக்கு நன்கு அறிமுகம் ஆன கிறிஸ்தவ வேட்பாளர்களையே களம் இறக்கி வெற்றி கண்டு வருகின்றன.

2011-ல் திருப்பம்

ஆனால், 2011 தேர்தலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. 1980-க்கு பிறகு அதாவது 31 ஆண்டுகளுக்கு பின்பு யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக நாகர்கோவில் தொகுதியைக் கைப்பற்றியது. அதிமுக வேட்பாளர் நாஞ்சில் முருகேசன் 58,573 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்து நாடார் வேட்பாளரான இவர், கிறிஸ்தவர்களின் பெரும்பான்மை வாக்குகளையும் தனது பக்கம் திருப்பியது வெற்றிக்கு அடித்தளம் இட்டது.

திமுக வேட்பாளர் ஆர்.மகேஷ் 52,099 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். தற்போதைய மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் 3-ம் இடத்தை பிடித்தார்.

முந்தியது பாஜக

நடப்பு தேர்தலுக்கு, மற்ற கட்சிகள் இன்னும் வேட்பாளர் தேர்வையே முடிக்காத நிலையில், பாஜக தனது வேட்பாளர்களை முன்னதாகவே களம் இறக்கியுள்ளது. நாகர்கோவில் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி தொகுதியில் தனது தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

அரசியல் ரீதியாக பாஜக என்ற கட்சி தொடங்கும் முன்னரே, தனது இந்து ஆதரவு போராட்டங்களால், நாகர்கோவிலில் நன்கு அறியப்பட்டவர் இவர். எவ்வித சர்ச்சையிலும் சிக்காமல், தனது அரசியல் வாழ்க்கையில் நேர்மையைக் கடைபிடிப்பவர். எனவே, எம்.ஆர்.காந்தியின் போட்டியால் அதிமுக, திமுக உட்பட முக்கிய கட்சிகள் அனைத் தும், நாகர்கோவில் தொகுதியில் வேட்பாளர்கள் தேர்வுக்கு, கடும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

டாரதி சாம்சன்

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கே கிறிஸ்தவ ஆதரவு வாக்குகள் அதிக அளவில் கிடைத்து வருகின்றன. இதனாலேயே கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இக்கூட்டணி குமரி மாவட்டத்தில் 4 தொகுதிகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதை கருத்தில் கொண்டே கிறிஸ்தவ ஆதரவு வாக்குகளை அதிகம் பெறும் வேட்பாளர் யார்? என அதிமுக தலைமை தீர விசாரித்தது. டாரதி சாம்சனை கட்சி தலைமை நேர்காணலுக்கு அழைத்தது.

திமுகவில் யார்?

திமுகவை பொறுத்தவரை இத்தொகுதியை கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன் கேட்கிறார். கிறிஸ்தவர்களான ஹெலன் டேவிட்சன், ஆஸ்டின் ஆகியோருக்கு சீட் வழங்க வேண்டும் என, கிறிஸ்தவ அமைப்புகள் திமுக தலைமையிடம் பரிந்துரை செய்து வருகின்றன. ஆனால், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ஆஸ்டின் விருப்பம் தெரிவித்திருப்பதால், நாகர்கோவில் தொகுதியில் திமுக தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வில் கடைசிநேர திருப்பம் ஏற்படலாம்.

எனினும், எம்.ஆர்.காந்தியை களத்தில் இறக்கியிருப்பதன் மூலம், நாகர்கோவில் தொகுதியில் கடும் போட்டியை ஏற்படுத்தி, தேர்தல் களத்தை பரபரப்பாக்கி இருக்கிறது பாஜக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x