Published : 09 Jan 2022 09:05 AM
Last Updated : 09 Jan 2022 09:05 AM
பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட வாரச் சந்தைகளில் சண்டை சேவல்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இதேபோல் விவசாயத்தை சார்ந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பிலும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது நாட்டுக்கோழி, சண்டைச் சேவல்கள் வளர்ப்பிலும் கிராமப்புறங்களில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை வாரந்தோறும் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி மாடுகள், நாட்டுக்கோழிகள், சண்டைசேவல்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறும்போது, மாவட்டத்தில் போச்சம்பள்ளி, குருபரப்பள்ளி, ஒரப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் வாரச்சந்தைகளில் கால்நடை விற்பனை நடைபெறுகிறது. தமிழக பாரம்பரிய விளையாட்டுகளில் சேவல் சண்டை உள்ளதால், சேவல் விற்பனையும் நடக்கிறது.
மேலும், சந்தைகளுக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, ஈரோடு மற்றும் கொங்கணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சண்டை சேவல்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சண்டை சேவல்களை வாங்குவதற்காக ஹைதராபாத், சித்தூர், கடப்பா, காக்கிநாடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகின்றனர்.
இங்கு வால் சேவல், வெத்துகால், சிலிக்கிஸ், கட்டை மூக்கன், கத்தி கொண்டை, ஆயிரம் கொண்டை உள்ளிட்ட பல்வேறு ரக சண்டை சேவல்கள் கொண்டு வரப்படுகின்றன.
சேவல்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக பயிற்சியாளர்களால் பயிற்சியளிக்கப்பட்ட சேவல்கள் இதைவிட பல மடங்கு அதிக விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை பெரும்பாலும் நேரடியாக வீடுகளைத் தேடிச்சென்று வாங்கிச்சென்று விடுவதால் அவை சந்தைக்கு கொண்டு வரப்படுவதில்லை.
பொங்கலையொட்டி மாவட்டத்தில் நடைபெறும் சந்தைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சண்டை சேவல், கோழி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT