Published : 09 Jan 2022 08:40 AM
Last Updated : 09 Jan 2022 08:40 AM

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பல இடங்களில் விரிசல்; மேற்கூரை இடிந்து விழுந்தும் கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி

கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு உருக்குலைந்து காணப்படும் பஸ் நிலைய மேற்கூரை. படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்று ஒரு காலத்தில் தமிழகத்தின் பிற பஸ் நிலைங்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்த மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் தற்போது சிதிலமடைந்து அபாயகரமாக காட்சியளிக்கிறது. கடந்த வாரம் மேற்கூரை இடிந்து விழுந்தும் உடனடியாக சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வராதது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டுத்தாவணி பஸ் நிலையம், 1999-ம் ஆண்டு மே 25-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணா நிதியால் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு அடுத்து தமிழ கத்தின் 2-வது மிகப்பெரிய பஸ் நிலையமாக திகழ்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் வகையில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்குகிறது.

தமிழகத்திலேயே முதன் முறையாக ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற பஸ் நிலையமாக மாட்டுத்தாவணி பஸ் நிலையம் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக பஸ் நிலையப் பராமரிப்பில் மாநக ராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டியதால் தற்போது மோசமாக காட்சியளிக்கிறது. முறையாக பராமரிப்பு பணி நடைபெறாததால் மேற்கூரைகளில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்துவிழும் நிலையில் உள்ளது.

கடந்த வாரம் பஸ் நிலையத்தின் மேற்கூரை சுவர் இடிந்து ஒருவர் காயமடைந்தார். அதன் பிறகாவது மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பஸ் நிலையத்தை பராமரிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால், பயணிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பஸ் நிலையத்தை பராமரிக்கத் திட்ட மதிப்பீடு தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் பராமரிப்புப் பணிகள் தொடங்கிவிடும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x