Published : 09 Jan 2022 08:46 AM
Last Updated : 09 Jan 2022 08:46 AM
ராமேசுவரத்தில் மணலில் புதைந்து கிடக்கும் ராமநாதசுவாமி கோயிலுக்கு தொடர்புடைய தீர்த்தக் குளங்களை கண்டுபிடித்து புனரமைக்கும் பணிகளை ஆற்றிவரும் விவேகானந்த கேந்திரம் அமைப்புக்கு சிறந்த தொண்டு நிறுவன பிரிவில் மத்திய ஜல் சக்தித் துறை தேசிய தண்ணீர் விருதை அறிவித்துள்ளது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தொடர்புடைய 108 புனித தீர்த்தக் குளங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. இவற்றில் கோயிலின் உள்ளே அமைந்துள்ள 22 தீர்த்தங்களும், அக்னி தீர்த்தக் கடலும் அடங்கும். முன்பெல்லாம் ராமேசுவரத்துக்கு தீர்த்தமாட வருபவர்கள் ஒரு மாத காலம் தங்கியிருந்து 108 தீர்த்தங்களிலும் தீர்த்தமாடி விட்டுச் செல்வர். கடந்த 50 ஆண்டுகளில் இந்த 108 தீர்த்தங்களில் பல தீர்த்தங்கள் தனியார் ஆக்கிரமிப்பு, இயற்கை சீற்றங்களால் அழிவுக்குள்ளாகியும், மணலில் மூடியும் மறைந்து போயின.
அப்துல் கலாம் தொடங்கியது
விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விவேகானந்த கேந்திரம் அமைப்பு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்குத் தொடர்புடைய தீர்த்தங்களை புனரமைக்க தொடங்கியது. இதன் தொடக்க விழாவை, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 28.01.2014 அன்று ராமேசுவரத்தில் தொடங்கி வைத்து இந்தத் திட்டத்துக்கு “பசுமை ராமேசுவரம்” என்ற பெயரும் சூட்டினார்.
விவேகானந்த கேந்திரம் இத்திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளாக 37 தீர்த்தங்களை சுமார் ரூ.3.5 கோடி செலவில் புனரமைத்துள்ளது. இதில் தர்மர், சர்வரோக நிவாரண, பரசுராம், ஞானவாதி, குமுதம், ஹர, நீலகண்ட, பனச்ச, கிருஷ்ண ஆகிய தீர்த்தங்கள் முழுமையாக மணலில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் பல குளங்களில் தற்போது தண் ணீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் 3-வது தேசிய தண்ணீர் விருதுகளை, மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நேற்று அறிவித்தார். இதில் 2020-ல் நீர்வளத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கான சிறந்த மாநிலங்களுக்கான பிரிவில் தமிழ்நாட்டுக்கு 3-ம் பரிசு அறி விக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திய சிறந்த தொண்டு நிறுவனப் பிரிவில் விவேகானந்தா கேந்திரா-வுக்கு 2-ம் பரிசும் வழங்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT