Last Updated : 08 Jan, 2022 07:41 PM

 

Published : 08 Jan 2022 07:41 PM
Last Updated : 08 Jan 2022 07:41 PM

உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞருக்கு லஞ்சம் கொடுக்க அரசு ஊழியர் முயற்சி: லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி விசாரணைக்கு உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூடுதல் அரசு வழக்கறிஞருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உதவியாளராகப் பணிபுரிபவர் எஸ்.குமாரவேல். இவர் மீது பணி நேரத்தில் சக ஊழியர் ஒருவருடன் தகராறு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இவருக்கு 3 ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து 2013-ல் உத்தரவிடப்பட்டது. ஊதிய உயர்வு நிறுத்தத்தை 3 மாதமாக குறைக்கக் கோரி குமாரவேல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர் ஏ.கண்ணன் ஆஜராகி, இந்த வழக்கின் மனுதாரர் எனது உதவியாளர்களிடம் நேரிலும், போனிலும், இந்த வழக்கில் தனக்கு சாதகமாக நடந்துகொண்டால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகக் கூறியுள்ளார் என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

''லஞ்சம் இந்த அளவுக்கு விரிவடைந்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. மனுதாரர் ஏற்கெனவே தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்குள் நுழைந்து, தனது வழக்கு எந்த அரசு வழக்கறிஞருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தைத் தெரிந்துகொண்டு, அந்த வழக்கில் தனக்கு சாதகமாக நடந்து கொள்வதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக தைரியமாகக் கூறியுள்ளார்.

மனுதாரரின் இந்தச் செயலைக் கடுமையாக அணுக வேண்டும். கூடுதல் அரசு வழக்கறிஞரின் குற்றச்சாட்டு குறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி விசாரணை நடத்தி 19.1.2021-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்த தகவலை நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்ததுடன், அது தொடர்பாக மனுத்தாக்கல் செய்த கூடுதல் அரசு வழக்கறிஞர் கண்ணனை நீதிமன்றம் பாராட்டுகிறது. ஒவ்வொரு அரசு ஊழியரும் தங்களுக்கு லஞ்சம் கொடுக்க அணுகும்போது இவ்வாறு செயல்பட வேண்டும்''.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x