Published : 08 Jan 2022 01:10 PM
Last Updated : 08 Jan 2022 01:10 PM
புதுச்சேரி: "புதுச்சேரியில் சிறுவர்கள் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். பெரியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பது மன்னிக்க முடியாதது. பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். அதில் பிரச்சனை ஏதேனும் வந்தால் பள்ளிகள் மூடுவது குறித்து பரிசீலனை செய்வோம்" என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறை மூலம் பள்ளிகளில் தடுப்பூசி முகாம்கள் நடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக வானரப்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமினை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (ஜன.8) தொடங்கி வைத்தார். தொடர்ந்து துணைநிலை ஆளுநர் முன்னிலையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை பேசுகையில், ‘‘சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் முழுவதுமாக தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் அந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவர்களைப் பாராட்டுகிறேன். மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக வீடுவீடாக சுகாதாரத் துறையினர் சென்றனர். ஆனால் சிலர் ஏற்கவில்லை. தடுப்பூசித் திட்டத்தில் குழந்தைகள் பெரியவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்.
கரோனா இல்லாத காலத்தில் குழந்தைகள் வாழ வேண்டும் என்பது அரசின் விருப்பம். தடுப்பூசி வெளிநாட்டிலிருந்து வராதா என்று ஏங்கிக் கொண்டிருந்த காலம் மாறி தற்போது உள்நாட்டில் தயாரித்த தடுப்பூசிகளை 150 கோடி டோசுக்கு மேல் செலுத்தி இருக்கிறோம். இது உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை. தங்களுடைய தூக்கம், உணவு, குடும்பம் எல்லாவற்றையும் மறந்து பயிற்சி கூடத்தில் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளால் இவை அனைத்தும் சாத்தியமானது. அவர்கள் அனைவரும் அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.
முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தால் மட்டுமே கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள எடுத்துக் கூறுங்கள். புத்தகங்கள் மூலமாக நம்முடைய வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பாடப் புத்தகங்களைத் தாண்டி புதிய புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்’’என்று பேசினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ அனிபால் கென்னடி, சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர். ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறும்போது, ‘‘குழந்தைகள் தடுப்பூசி பற்றி புரிந்துகொண்டு தயக்கம் இல்லாமல் போட்டுக்கொள்கிறனர். பெரியவர்கள் தடுப்பூசி போடாமல் இருப்பது மன்னிக்க முடியாதது. ஆப்பிரிக்காவில் கரோனா அதிகரிக்க காரணம் தடுப்பூசி அதிகம் போடாடததுதான் என்ற உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வற்புறுத்தப்படுகிறது. தடுப்பூசி போட்டவர்களை எந்த வகை கரோனாவும் அபாயகரமாக தாக்குவதில்லை என்பது அறிவியல் ஆராய்ச்சி.
புதுச்சேரி முதல்வரும் தடுப்பூசியை ஊக்கப்படுத்தி வருகிறார். புதுச்சேரி 100 சதவீத தடுப்பூசியை நோக்கி போய் கொண்டிருக்கிறது. தற்போது 75 சதவீதம் முதல் தவணையும், 50 சதவீதத்துக்கும் மேல் இரண்டாவது தவணையும் போடப்பட்டிருக்கிறது. தடுப்பூசி போடாமல் இருக்கின்ற ஒரு லட்சம் பேரும் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். புதுச்சேரி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அக்கறை அரசுக்கு உண்டு.
இந்தியா முழுவதும் கரோனா மீண்டும் அதிகமாக பரவி வருவதால் புதுச்சேரியில் நடக்க இருந்த தேசிய இளைஞர் விழாவை, காணொளி காட்சி மூலமாக பிரதமர் தொடங்கி வைப்பார். புதுச்சேரியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. 50 சதவீதம் வரை கூட்டத்தை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆசிரியர்களும், பெற்றோரும் நம்புவதால் பள்ளிகள் செயல்படுகின்றன. பிரச்சினை ஏதேனும் இருந்தால் பள்ளிகள் மூடுவது குறித்து பரிசீலனை செய்வோம். மேலும், தற்போது பள்ளிகள் நடைபெற்றால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஏதுவாக இருக்கும்" என்றார் ஆளுநர் தமிழிசை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT