Published : 08 Jan 2022 12:37 PM
Last Updated : 08 Jan 2022 12:37 PM

நீட்டுக்கு முன் மருத்துவ மாணவர் சேர்க்கை; முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: வானதி சீனிவாசன்

சென்னை: நீட் தேர்வு வருவதற்கு முன் அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நீட் தேர்வுக்கு முன் எவ்வளவு கட்டணம் வசூலித்தனர், எவ்வளவு நன்கொடையாகப் பெற்றனர் என்பது குறித்து வெள்ளை அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் பங்கேற்ற வானதி சீனிவாசன், நீட் விலக்கு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், "நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை. மருத்துவ மாணவர் சேர்ககையில் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிப்பதாகக் கூறுவதை ஏற்கவில்லை. நீட் தேர்வால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுகிறது எனக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. நீட் தேர்வால் இட ஒதுக்கீடு எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை, சமூக நீதிக்கு எள் முனையளவுக்கும் பாதிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பு வரை ஒவ்வொரு ஆண்டும் 30 முதல் 35 சதவீதம் வரையில்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. ஒரு சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்க்கை பெற்றுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் காரணமாக சுமார் 220 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். தமிழகத்து மாணவர்களின் மீது நம்பிக்கை வையுங்கள், அவர்களைக் குழப்பாதீர்கள்.

தமிழகத்தில் எந்தெந்த அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மருத்துவக் கல்லூரிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், நீட் தேர்வு வருவதற்கு முன் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற கட்டணம், நன்கொடை எவ்வளவு, நீட் தேர்வுக்கு முன் எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றனர் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக சார்பில் கேட்டுக் கொள்கிறோம். வெள்ளை அறிக்கையையும் மாநில முதல்வர் அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எந்த வரையறையும் இல்லாமல் கட்டணக் கொள்ளை நடத்திக் கொண்டிருந்ததை நீட் தேர்வு தடுத்து நிறுத்தியிருக்கிறது. நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்குச் சென்றால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை இல்லை என்பதை பல்வேறு மாணவர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்" என வானதி சீனிவாசன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x