Published : 20 Apr 2016 03:12 PM
Last Updated : 20 Apr 2016 03:12 PM
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், திருவாரூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்கள்தான் வசித்து வருகின்றனர்.
தற்போது விவசாயப் பணிகள் இல்லாததால் பெரும்பாலான தொழிலாளர்கள் கேரள மாநிலம் கொச்சி, எர்ணாகுளம், பாலக்காடு, திருச்சூர் ஆகிய பகுதிகளுக்கும், அதேபோல திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளில் விசைத்தறி மில்களுக்கும் வேலைக்குச் சென்றுள்ளனர்.
மேலும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் தங்கிப் பணியாற்றி வருகின்றனர்.
மாவட்டத்தை விட்டு பணிநிமித்தமாக வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலத்துக்குச் சென்றவர்களை தேர்தலையொட்டி வாக்களிக்க வரழைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர் தட்சிணாமூர்த்தி கூறியபோது, “திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதால் பிழைப்புக்காக கேரளா, திருப்பூர் பகுதிக்கு தொழிலாளர்கள் சென்றுவிடுகின்றனர். அவர்களுக்கு சொந்த ஊரில்தான் வாக்குகள் உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி(திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த தொழிலாளர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறையை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், தேர்தல் வாக்குப்பதிவு நாள் திங்கள்கிழமை வருவதால், தனியார் நிறுவனங்கள் சனி, ஞாயிறைத் தொடர்ந்து, திங்கள் கிழமையையும் சேர்த்து விடுமுறை அளிப்பது என்பது சந்தேகம்தான். அப்படி விடுமுறை அளித்தால் 3 நாட்களும் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால் விடுமுறை அளிக்க முன்வர மாட்டார்கள்.
இத்தகைய நிறுவனங்களில் பணியாற்றும் வெளியூர் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்தால்தான் அவர்கள் தேர்தலில் வாக்களிக்க சாத்தியம் ஏற்படும். அதற்காக, இந்த நிறுவனங்களை நடத்தும் உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களின் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடுவதுடன் அவ்வாறு விடுமுறை அளிக்கப்பட்டதா என கண்காணிக்க வேண்டும்.
அதேபோல, கேரளாவில் தோட்ட வேலை, கட்டிட வேலையில் செய்பவர்களை சொந்த ஊருக்கு வரவழைக்க ஏதுவாக திருவாரூர் மாவட்ட நிர்வாகம், கிராமங்கள்தோறும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்துவதுடன், அவர்களை தொடர்புகொண்டு வாக்களிப்பதற்காக வரவழைக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT