Published : 07 Jan 2022 07:32 PM
Last Updated : 07 Jan 2022 07:32 PM
புதுச்சேரி: வரும் 19-ம் தேதி காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கி நடைபெறுகிறது. இதற்கான அனுமதி அட்டையை 9-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என புதுச்சேரி காவல்துறை டிஐஜி மிலிந்த் மகாதியோ தும்ரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஜன. 7) மாலை காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுச்சேரி காவல் துறையில் உள்ள காவலர்-390, ரேடியோ டெக்னீசியன் 12, மற்றும் டெக் ஹேண்டலர்-29 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதன்படி மொத்தமாக 17,227 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் காவலர்-16, 337, ரேடியோ டெக்னீஷியன்-25, டெக் ஹேண்ட்லர்-636 என மொத்தம் 14,787 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2,440 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில் காவல் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 19-ம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. கோரிமேடு காவலர் மைதானத்தில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர 20 நாட்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும்.
நாள் ஒன்றுக்கு காலை 6, 8,10 ஆகிய நேரங்களில் 750 பேர் வீதம் 20 நாட்களுக்கு தேர்வு நடத்தப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை முறையே பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டுடன் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் வரும் 9-ம் தேதி காலை 10 மணி முதல் தங்களின் அனுமதி அட்டைகளை (அட்மிட் கார்டு) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதில் தேர்வுக்கான தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் தகுதியான அனைத்து விண்ணப்பங்களின் பட்டியல், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் நிராகரிப்புக்கான காரணம் ஆகியவை https://police.py.gov.in என்ற காவல் துறை இணையதளத்தில் பார்வைக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் அதனை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
தற்போது கரோனா பெருந்தொற்று காலம் என்பதால் தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இதேபோல் விண்ணப்பதாரர்கள் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 48 மணி நேரத்துக்கு முன்பாக ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுத்தற்கான சான்றுடன் வரவேண்டும். 'பாசிட்டிவ்' இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். தேர்வு நடக்கும் மைதானத்தில் குடிநீர், கழிப்பறை, முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கியமாக காவலர் பணியிடத்துக்கான தேர்வு முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையில் தான் நடக்கிறது. பணம் கொடுத்து வேலை வாங்கி தருவதாக புரோக்கரோ அல்லது வேறு யாரேனும் ஆசை வார்த்தைகளை கூறி கேட்டால் நம்ப வேண்டாம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும் சந்தேகங்களை 0413-2277900 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT