Published : 07 Jan 2022 04:22 PM
Last Updated : 07 Jan 2022 04:22 PM
புதுச்சேரி: கரோனா தொற்றுப் பரவலின் தன்மையைப் பொறுத்து பள்ளிகளை மூடுவது குறித்து முதல்வருடன் கலந்து பேசி அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி திருக்கனூர் அடுத்த பி.எஸ்.பாளையம் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று (ஜன. 7) நடைபெற்றது. இம்முகாமைப் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மண்ணாடிப்பட்டு அரசு சமுதாய நலவழி மையத்தின் முதன்மை அதிகாரி மோகன்தாஸ், பள்ளி துணை முதல்வர் சவுந்தரராஜன், முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன் மற்றும் பாஜக பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் ஜன.3-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதனடிப்படையில் புதுச்சேரி மாநிலத்தில் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட பி.எஸ்.பாளையம் கிராமத்தில் தடுப்பூசி முகாம் ஆரம்பித்து வைத்துள்ளோம். தொடர்ந்து அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு கரோனா பெருந்தொற்று தொற்றாத வண்ணம் பாதுகாப்பதற்கு மேலும் தடுப்பூசி உதவும்.
தடுப்பூசியைப் புதுச்சேரி மாநிலத்துக்கு வழங்கிய பிரதமருக்கு அரசு மற்றும் மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்தார்.
அப்போது, கரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற கேள்விக்கு, ‘‘புதுச்சேரியில் கரோனா தொற்று மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது குறைவாகத்தான் இருக்கிறது. கரோனா தொற்றுப் பரவலின் தன்மையைப் பொறுத்து, அடுத்தகட்ட முடிவை முதல்வருடன் கலந்து பேசி அறிவிப்பை வெளியிடுவோம்’’ என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT