Published : 07 Jan 2022 01:58 PM
Last Updated : 07 Jan 2022 01:58 PM
சென்னை: பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசினார். அப்போது சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.501.69 கோடி அளவில் பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இது தொடர்பாக பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், ''கடந்த 2020 - 21ஆம் ஆண்டுகளில் பயிர்க் கடன் வழங்குவதற்கு ரூ.11,000 கோடி வரை குறியீடு நிர்ணயிக்கப்பட்டது. இதில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பயிர்க் கடன் வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறியீடு முறையே ரூ.746 கோடி மற்றும் ரூ.534 கோடி.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பயிர்க் கடன் பெற்ற விவசாயிகள் கடன் உறுதிமொழியில் கூடுதலான பரப்பில் பயிர் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அளித்த விவரங்களுக்கும் நில அடங்கலில் உள்ள விவரங்களுக்கும் நிறைய முரண் உள்ளது. இதுபோன்ற விதிமீறல்கள் பிற மாவட்டங்களில் நடைபெற்றிருப்பினும், இவ்விரு மாவட்டங்களில் மட்டுமே அதிகம் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில், விவசாயிகளுக்குக் கடன் வழங்குவது, அதிக முக்கியத்துவம் வாய்ந்த பணியாக இருக்கிறது. விதிகளின்படி கடன் வழங்க வேண்டியது கூட்டுறவு சங்கத்தின் முக்கியமான பணி என்பதையும் கருத்தில் கொண்டு இவ்வகையான விதிமீறல்கள் இனி நடைபெறா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதனை மீறி இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையைப் பரிவுடன் பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பயிர்க் கடன் தள்ளுபடிச் சான்றினை வழங்கலாம் எனவும், அவர்களுக்கு மீண்டும் தொடர்ந்து பயிர்க் கடன் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 51,017 விவசாயிகளுக்கு ரூ.501.69 கோடி அளவிற்கு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு நடப்பாண்டில் மீண்டும் பயிர்க் கடன் வழக்கம் போலத் தொடர்ந்து வழங்கப்படும். இனி வருங்காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாத வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT