Published : 07 Jan 2022 01:38 PM
Last Updated : 07 Jan 2022 01:38 PM
சென்னை: திண்டுக்கல், தேனி, தருமபுரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக 4 போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸடாலின் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரைத்தார். அப்போது, ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை மற்றும் செயல்பாடுகளை விளக்கும் அறிக்கை என்றும், பேரறிஞர் அண்ணாவின் கூற்றுப்படி, ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டதாகவும் கூறினார்.
கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வரும் கூட்டத்தில் பேசிய 15 உறுப்பினர்கள் தெரிவித்துள்ள ஆக்கபூர்வமான கருத்துகளை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், கரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் அரசு துரிதமாக செயல்படுவதாகவும், நீட் தேர்வு தொடர்பான அரசின் போராட்டங்களுக்கு அதிமுக முழுமையான ஆதரவு தரும் என்றும் கூறிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கத்துக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
சிறைவாசிகள் முன்விடுதலை குறித்துக் கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமதுக்கு பதிலளித்த முதல்வர், 10 மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து வரும் சிறைவாசிகள், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோயுற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டோரைச் சட்ட வழிகளைப் பின்பற்றி, பேரறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்த நாளையொட்டி விடுதலை செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கோரிக்கை வைத்திருந்ததாகக் கூறிய முதல்வர், அரசு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்துப் பள்ளி, கல்லூரிகளில் 24 ஆயிரத்து 513 முகாம்களும், 249 விழிப்புணர்வு ஊர்வலங்களும் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்காக திண்டுக்கல், தேனி, தருமபுரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக 4 போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பின்னர் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதுவரை 2 ஆயிரத்து 363 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சென்னை மாநகரில் மட்டும் பதிவு செய்யப்பட்ட 338 வழக்குகளில் 135 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
வழக்குகளில் விரைவான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்ததன் பேரில், சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு ஒன்றில், 23 நாள்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 82 நாள்களில் முடிந்து தண்டனையே வழங்கப்பட்டுவிட்டதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT