Published : 07 Jan 2022 08:52 AM
Last Updated : 07 Jan 2022 08:52 AM
சென்னை: சென்னையில் கரோனா தொற்றைக் கண்டறிவதற்கான மாதிரி சேகரிப்பு மையங்கள், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கான முதல்கட்ட உடல் பரிசோதனை மையங்களின் விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னைமாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் தொற்றைக் கட்டுப்படுத்தவும், தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் வருவோர்மற்றும் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக 160 தடவல் மாதிரி சேகரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களைப் பரிசோதிக்க 21 இடங்களில் முதல்கட்ட உடல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தொற்றின் தன்மை அறியப்படும்.
தொற்று உறுதியானவர்களில் மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்கள், மாநகராட்சி சார்பில் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சைமையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
கரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள 2 தவணை தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். அதற்காக, மாநகராட்சி சார்பில் வார இறுதி நாட்களில் 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதர நாட்களில் மாநகராட்சியின் அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மாதிரி சேகரிப்பு மையங்கள், முதல்கட்ட உடல் பரிசோதனை மையங்கள், கரோனா சிகிச்சை மையங்கள், தினமும் தடுப்பூசி போடும் மையங்கள், வார இறுதி நாட்களில் நடத்தப்படும் தடுப்பூசி மையங்கள் ஆகியவற்றின் அமைவிடங்கள் மாநகராட்சியின் http://covid19.chennaicorporation.gov.in/covid/home/ என்ற இணையதள இணைப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT