Published : 06 Jan 2022 10:20 PM
Last Updated : 06 Jan 2022 10:20 PM
சென்னை: கரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக, தமிழகத்தில் வியாழன் இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5 மணி வரை நீடிக்கும்.
தமிழகத்தில் இன்று 6,983 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 3579 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,67,432. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,73,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,தமிழக அரசு இன்று முதல் இரவு நேர ஊரடங்கு, வரும் ஞாயிற்றுக்கிழமையில் பொது முழு ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தம் எனப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன்படி இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
தலைநகர் சென்னையில் ஊரடங்கை ஒட்டி 312 சோதனைச் சாவடிகள் அமைத்து 10,000 போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேடு காய்கறிச் சந்தைக்குச் செல்லும் வாகனங்கள் உரிய தணிக்கைக்குப் பின்னரே அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவில் எவற்றிற்கு எல்லாம் அனுமதி?
* அத்தியாவசியப் பணிகளான பால், செய்தித்தாள் விநியோகம், மருத்துவம் சார்ந்த பணிகள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதி.
* பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரம் செயல்பட அனுமதி.
* உற்பத்தித் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பச் சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதி. என்றாலும், இரவு பணிக்குச் செல்பவர்கள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
* தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் அரசு அறிவுரை செய்துள்ளது.
* விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி. ஆனால் பயணிக்கும்போது, பயணச்சீட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போதும் செயல்பாட்டில் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT