Published : 06 Jan 2022 06:32 PM
Last Updated : 06 Jan 2022 06:32 PM
சென்னை: வைகுந்தத்திற்கு சாலை அமைக்க கிருஷ்ண பரமாத்மாவிடம் அனுமதி பெறப்பட்டதா? என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு அளித்த பதிலால் அவையில் கலகலப்பு ஏற்பட்டது.
நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கிய நிலையில், சட்டப்பேரவை கேள்வி நேரம் தமிழக வரலாற்றில் முதல் முறையாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் கேள்வி நேரத்தில் திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன், 'கோழிக்கால்நத்தம் - வைகுந்தம் இடையிலான சாலை விரிவாக்கம்' குறித்துக் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்த விவரம்:
ஈஸ்வரன் (கொமதேக): திருச்செங்கோடு தொகுதிக்குட்பட்ட கோழிக்கால் வைகுண்டத்தை இணைக்கின்ற சாலை மட்டுமல்ல, திருச்செங்கோடு ஒன்றியம், மல்லசமுத்திரம் ஒன்றியம், நாமக்கல் பகுதிகளிலிருந்து சேலம், கொச்சின் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கின்ற சாலை இந்தச் சாலை. எனவே இதனை தாமதப்படுத்தாமல் இருவழிச்சாலையாக மாற்றித்தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
எ.வ.வேலு (பொதுப்பணித்துறை அமைச்சர்): இதுபோன்ற ஒருவழிச்சாலைகள் நிறைய உள்ளன. பல்வேறு தொகுதிகளில், பல மாவட்டங்களில் உள்ளது என்பதை முதல்வர் அறிந்த காரணத்தினால்தான் ஒருவழிச் சாலையெல்லாம் இருவழிச் சாலையாக்க வேண்டும் என்று முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒருவழிச் சாலையெல்லாம் இருவழிச் சாலையாக்க வேண்டுமென்று முடிவு செய்து, இந்த ஆண்டு 600 கிலோ மீட்டர் தொலைவில் திட்ட மதிப்பீட்டில் எடுத்திருக்கிறோம். அதில்தான் இந்தச் சாலையும் வருகிறது. கட்டாயம் செய்து முடிப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓபிஎஸ் (எதிர்க்கட்சி துணைத்தலைவர்): சேலம் கோழிக்கால் நத்தம் வடுகப்பட்டி வழியாக வைகுந்தத்திற்கு சாலை அமைக்க வேண்டுமென்று எங்கள் உறுப்பினர்கள் கேள்வி கேட்டதற்கு அமைச்சரும் பதில் சொல்லியிருக்கிறார். வைகுந்ததிற்கு சாலை அமைக்க வேண்டுமென்றால் கிருஷ்ண பரமாத்மாவிடம் அனுமதி பெற வேண்டும். அவரிடம் அனுமதி வாங்கியாகிவிட்டதா என அமைச்சர் தெரிவிக்க வேண்டும். (சபாநாயகர் சிரிப்பு)
அமைச்சர் எ.வ.வேலு: நாட்டில் அறநிலையத்துறை பணிகள் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் ஆன்மிக மக்கள் என்னென்ன விரும்புகிறார்களா அவை பார்த்துப் பார்த்து, நடந்து வருகின்றன. அது சிவலோகத்திற்குப் போவதாக இருந்தாலும் சரி, வைகுந்தத்திற்குப் போவதாக இருந்தாலும் நம்முடைய சேகர் பாபு அதற்கு வழிகாட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். வைகுந்தத்திற்கு சாலை போட கிருஷ்ண பரமாத்வாவிடம் அனுமதி வாங்கும் வேலையை அமைச்சர் சேகர் பாபு பார்த்துக்கொள்வார். எனவே அதையே அவருக்கு பதிலாகச் சொல்ல விரும்புகிறேன்.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறியது அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT