Published : 06 Jan 2022 02:04 PM
Last Updated : 06 Jan 2022 02:04 PM

பொம்மையாக செயல்படும் புதுவை முதல்வர் ரங்கசாமி; முடிவு எடுக்கும் ஆளுநர் தமிழிசை: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி ஒரு பொம்மையாக செயல்படுகிறார், ஆளுநர் தமிழிசைதான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

”புதுவையில் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கிறது. முதல்அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுநர் தமிழிசை அனைத்து அறிவிப்புகளையும் வெளியிடுகிறார். பிரதமர் புதுவைக்கு வருகிறார் என ஆளுநரே கூறுகிறார். பிரதமர் வருகை குறித்து முதல்வர் ரங்கசாமியோடு அவர் கலந்து பேசினாரா என தெரியவில்லை.

இளைஞர் விழா புதுவையில் நடத்த முடிவெடுக்கும் முன்பு ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். இமாச்சல பிரதேச மாநில அரசு விழாவை நடத்த அனுமதிக்கவில்லை. கரோனா காலத்தில் இதுபோன்ற விழாக்களை நடத்த அனுமதிக்கக்கூடாது. எந்த சூழலில் பிரதமர் வருகிறார் என்பதும் தற்போதைய சூழலில் புதுவைக்கு இளைஞர் விழா தேவையா என்ற கேள்வி எழுகிறது.

8 ஆயிரம் இளைஞர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என 20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் வந்தால் கரோனா எப்படி பரவாமல் இருக்கும். புதுவையை பிரதமர் மோடி புறக்கணித்துள்ளார். பெஸ்ட் புதுவையாக மாற்றுவோம் என கூறினார். ஆனால் ஒன்றையும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ரூ.200 கோடியில் கொண்டுவந்த திட்டங்களை இப்போது நிறைவேற்றி வருகின்றனர். அட்சயபாத்திரம் திட்டம் காங்கிரஸ் கொண்டுவந்தது. அதை இப்போது திறக்கின்றனர். புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவோம், ரூ.8 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்வோம் என பல வாக்குறுதிகளை கூறினர். ஆனால் எதையும் செய்யவில்லை.

முதல்வர் ரங்கசாமி ஒரு பொம்மையாக செயல்படுகிறார். ஆளுநர் தமிழிசைதான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார். ஆளுநர் தமிழிசை முடிவுக்கு ரங்கசாமி கட்டுப்படுகிறார். ஆளுநர் தலைமையில் காபந்து அரசாக செயல்படுகிறது. இதுவே ரங்கசாமிக்கு மிகப்பெரும் இழுக்கு. ரங்கசாமியை பாஜகவினர் செயல்படவிடுவதில்லை. புதுவையில் அதிகார சண்டைதான் நடக்கிறது.

புதுவைக்கு வரும் முடிவை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேசிய இளைஞர் விழாவை புதுவையில் நடத்துவதை தள்ளிவைக்க வேண்டும். ஒமைக்ரான், கரோனா தொற்று புதுவையில் அதிகரித்து வருகிறது. வெளிமாநிலத்தினரால் புதுவையில் தொற்று பரவி மக்கள் அவதிப்படுவர். முதல்வர் ரங்கசாமி பிரதமருக்கு கடிதம் எழுதி, தற்போதைய சூழலில் விழா நடத்தினால் கரேனா பரவும் என தைரியமாக கடிதம் எழுத வேண்டும்.

பிரதமர் வருவதை வரவேற்கிறோம். ஆனால் அசாதாரணமான சூழ்நிலை நிலவும்போது பிரதமர் வருவதை தவிர்க்க வேண்டும். புதுவையில் ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும். பாஜகவினர் இதில் அரசியல் செய்யக்கூடாது." என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x