Last Updated : 06 Jan, 2022 09:41 AM

 

Published : 06 Jan 2022 09:41 AM
Last Updated : 06 Jan 2022 09:41 AM

கோவை மாநகராட்சி பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் உடல் நலன் அறியும் பணி தொடக்கம்

கோவை

கோவை மாநகராட்சி பகுதிகளில் தற்போது பரவிவரும் கரோனா தொற்றின் தன்மையைக் கண்டறிய, கடந்த டிசம்பர் மாதத்தில் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களது தற்போதைய உடல் நலன் அறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தற்போது அதிகரித்துவரும் கரோனா தொற்றுப்பரவலைக் கருத்தில் கொண்டு, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் 24 மணி நேர கரோனா கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திலிருந்து கடந்த டிசம்பர் மாதத்தில் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியவர்களின் தற்போதைய உடல் நலன் குறித்து விசாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இதற்காக 10 பணியாளர்கள் ஷிப்ட் முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி வசம் உள்ள தகவலின்படி 1,230 பேர் கடந்த டிசம்பர் மாதத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது தொடர்பு விவரங்கள் அனைத்தும் பெறப்பட்டுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது வீடுகளில் உள்ள நிலையில் அவர்களது உடல் நிலை எவ்வாறு உள்ளது, ஏதேனும் மருத்துவ உதவிகள், பிற தேவைகள் உள்ளதா, 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனரா என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. தற்போது எவ்வகையான கரோனா தொற்று பரவி வருகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. அதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தவிர, 24 மணி நேர கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அனைத்து வித கரோனா சார்ந்த நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன. உதாரணமாக, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளுதல், அவர்களை சிகிச்சைக்கு அனுப்புதல், வழிகாட்டுதல் விளக்கங்களை அளித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்ற கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவற்றோடு புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன. இதில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் விவரம், உடலில் முதலில் ஏற்பட்ட தொற்று பாதிப்பின் வெளிப்பாடு, எந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்கின்றனர் என்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அறிவுறுத்தப்படுகிறது.

இந்த மையத்திலிருந்து கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டு மையத்தை கண்காணிக்கும் வசதியும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x