Published : 06 Jan 2022 08:16 AM
Last Updated : 06 Jan 2022 08:16 AM
சென்னை: பெங்களூரு சீதாலட்சுமி குருகுலம் சார்பில் சென்னை நங்கநல்லூர் இந்து காலனியில் ஜன. 8,9-ம் தேதிகளில் ராமாயண முகாம் நடைபெறுகிறது.
சென்னை நங்கநல்லூர், இந்து காலனி வரசித்தி விநாயகர் கோயில் மண்டபத்தில் ஜன.8,9-ம் தேதிகளில் ராமாயண முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பெங்களூரு சீதாலட்சுமி குருகுலத்தைச் சேர்ந்த மாணவர்கள் வால்மீகி ராமாயணத்தின் பல்வேறு துறைகள் தொடர்பான அவர்களின் நுண்ணறிவு மற்றும் முன்னோக்குகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.
உபன்யாசகர் டாக்டர் ஆர்.ரங்கன்ஜி பெங்களூரில் உருவாக்கியுள்ள ஸ்ருதிராம் குருகுலம் வேத கல்வியை வால்மீகி ராமாயணப் படிப்புடனும் மரபுவழிக் கல்வியுடனும் இணைத்து வழங்குகிறது. அவரது மற்றொரு கல்வி மையமான சீதாலட்சுமி குருகுலம், வழக்கமான கல்வியுடன் குணநலன் மற்றும் ஆன்மிகத்தை பயிற்றுவிக்கிறது.
இவ்விரு பள்ளிகளும் வால்மீகி ராமாயண மூலக்கல்லின் மீது கட்டப்பட்டுள்ளன. சாஸ்திர பாடம், பதஞ்சலியின் யோக சூத்திரம் உபநிடதங்கள், பகவத் கீதை போன்றவை அனைத்து மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கப்படுகிறது. NIOS (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங்) மூலம் பல்வேறு ஆசிரியர்களால் கல்வி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து டாக்டர் ஆர்.ரங்கன்ஜி கூறியதாவது: வால்மீகி ராமாயணம் இன்றையமக்களுக்கு ஓர் அவசர விழிப்புணர்வாக இருக்கும். பிரபஞ்ச சித்தத்தின் (தர்மத்தின்) விருப்பப்படி வாழ்ந்த ராமபிரான், ஒருசாதாரண மனிதரைப் போலவே சாதாரண சூழ்நிலைகளில் வாழ்ந்தார். அவரது வாழ்க்கையை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு ராமாயண காவியத்தை நம்மைச்சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையில் ஒருங்கிணைத்துள்ளேன்.
சிறந்த முன்மாதிரியின் தொடர்ச்சியான சிந்தனையுடன் வேத நுண்ணறிவுகளை ஒன்றிணைத்து மாணவர்களுக்கு வால்மீகி ராமாயண படிப்பு, மரபுவழி கல்வி, குணநலன், ஆன்மிகம் ஆகியவற்றை ஸ்ருதிராம் குருகுலம், சீதாலட்சுமி குருகுலம் மூலம் பயிற்றுவிக்கிறோம். WEBOLIM (வெப் ஆஃப் லைஃப் மேக்கர்ஸ்) மூலம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வேதங்கள் மற்றும் ராமாயணம் குறித்து வகுப்புகள், முகாம்கள், விரிவுரைகள் நடக்கின்றன. அனைத்து வகுப்புகள், விரிவுரைகள் இலவசம். குருகுலம் மற்றும் வெபோலிம் பற்றிய கூடுதல் தகவல்களை www.webolim.org மூலம் அறியலாம்.
இதுதொடர்பாக சென்னை நங்கநல்லூரில் ராமாயண முகாம் நடத்த உள்ளோம். இதில் எங்கள் குருகுலத்தைச் சேர்ந்த மாணவர்கள் வால்மீகி ராமாயணத்தின் பல்வேறு துறைகள் தொடர்பான நுண்ணறிவு சிந்தனைகள் மற்றும் முன்னோக்குகளை பகிர்ந்து கொள்வார்கள். இதில் அனைவரும் பங்கேற்று தனித்துவமான வேத ஞானத்தை இல்லத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நேற்று (ஜன.5-ம் தேதி) முதல் 9-ம் தேதி வரை மாலை 6-30 மணி முதல் 8-30 வரை ‘வேத நெறி தழைத்தோங்க’ (வேதப் பாதை மலரட்டும்) என்ற தலைப்பில் டாக்டர் ஆர்.ரங்கன்ஜியின் தொடர் சொற்பொழிவு நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT