Published : 05 Jan 2022 07:03 PM
Last Updated : 05 Jan 2022 07:03 PM
மதுரை: சி.எம்.ஏ (இன்டர்) தேர்வு விதிமுறை 13-ஐ திருத்தி சுற்றறிக்கை வெளியிடுமாறும், இந்தி வழி அல்லாத தேர்வர்களுக்கும் ஆங்கிலத்தில் பதில் எழுத்து பூர்வ அளிக்க விடைத் தாளை அளித்து பாரபட்சத்திற்கு முற்றுப் புள்ளி வைக்குமாறும் மதுரை தொகுதி மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜன.5) ஐ.சி.ஏ.ஐ தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக எம்.பி. சு.வெங்கடேசனின் அறிக்கை பின்வருமாறு: சி.எம்.ஏ (இன்டர்) தேர்வில் இந்தியல்லா மொழி வழி தேர்வர்களுக்கு பாரபட்சம் இருப்பதை சுட்டிக் காட்டி 27.12.2021 அன்று ஐ.சி. ஏ.ஐ தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தேன்.
இந்தி வழி தேர்வர்களுக்கு பதில்களை தட்டச்சு வாயிலாகவோ, எழுத்து பூர்வமாகவோ பதிலளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியல்லாத வழி தேர்வர்களுக்கு B,C,D பகுதிகளுக்கு தட்டச்சு வாயிலாக பதில் அளிக்கிற வாய்ப்பு மட்டுமே தரப்பட்டிருந்தது. தேர்வு விதி முறைகள் எண் 13, இப் பாரபட்சத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருந்தது.
இது குறித்த எனது கடிதத்திற்கு பதிலளித்த ஐ.சி.ஏ.ஐ தலைவர் ராஜு ஐயர், எந்த விதமான பாரபட்சமும் இல்லை என்றும், இந்தி வழி அல்லாத தேர்வர்களும் எழுத்து பூர்வமாகவும் பதில் அளிக்கலாம். அவர்களும் இந்தி வழி தேர்வர்கள் போல தட்டச்சு/எழுத்து ஆகிய இரண்டு தெரிவுகளில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த விளக்கத்தை நான் பொது வெளியில் பதிவு இட்டவுடன் மாணவர்கள் பலர் கோபமாக எதிர்வினை ஆற்றியுள்ளார்கள். நேற்றும் இன்றும் நடைபெற்றுள்ள தேர்வுகளில் இந்தி வழி அல்லாத தேர்வர்களுக்கு எழுத்துபூர்வ விடை அளிக்கும் வாய்ப்பு தரப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்கள்.
இன்று நான் ஐ.சி.ஏ.ஐ தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உங்களின் பதிலுக்கும் கள நிலைமைக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. ஆகவே இதற்கான தெளிவான அறிவுறுத்தல்களை உடனே அளிக்குமாறும், விதிமுறை 13 ஐ திருத்தி சுற்றறிக்கை வெளியிடுமாறும், இந்தி வழி அல்லாத தேர்வர்களுக்கும் ஆங்கிலத்தில் பதில் எழுத்து பூர்வ அளிக்க விடைத் தாளை அளித்து பாரபட்சத்திற்கு முற்றுப் புள்ளி வைக்குமாறும் கோரியுள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT