Published : 05 Jan 2022 06:39 PM
Last Updated : 05 Jan 2022 06:39 PM

நாடாளுமன்றத்தில் தமிழகம், புதுச்சேரி எம்.பி.க்களின் செயல்பாடு எப்படி?- ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் கணிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த எம்.பி.க்களின் செயல்பாடு எப்படி என்பது குறித்து ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் எம்.பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருதை ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

விவாதங்களில் பங்கேற்பது, அதிக கேள்விகள் எழுப்புவது, தனி நபர் மசோதாக்களை அறிமுகம் செய்வது ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படுவோர், சிறந்த முதல்முறை எம்.பி. மற்றும் சிறந்த பெண் எம்.பி. ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதே புள்ளிகளின் அடிப்படையில் தான் அனைத்து மாநில எம்.பி.க்களின் செயல்பாடும் கணிக்கப்பட்டு இறுதியாக விருதுப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

அந்த வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களின் செயல்பாடு இப்படியாக உள்ளது.

விவாதங்களில் பங்கேற்பதில் திமுக எம்.பி. திருச்சி சிவா அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளார். 27 விவாதங்களில் இவர் பங்கேற்றுள்ளார். அதிமுகவைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, ஏ.விஜயகுமார் மற்றும் பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விவாதங்களில் பங்கேற்கவில்லை.
திமுக எம்.பி. வில்சன் அதிகப்படியான தனிநபர் மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் மொத்தம் 2 தனிநபர் மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இவரைத் தவிர திருச்சி சிவா, வைகோ ஆகியோர் தலா ஒரு தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.

மதிமுக எம்.பி. வைகோ அதிகப்படியான கேள்விகளை எழுப்பியுள்ளார். இவர் 119 கேள்விகளைக் கேட்டுள்ளார். நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதுமே எவ்விதமான கேள்வியும் எழுப்பாதவர்கள் 8 பேர்.

வருகைப் பதிவில் திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா மற்றும் அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் 100 சதவீத வருகையைப் பதிவு செய்துள்ளனர்.

மக்களவை நிலவரம்: மக்களவையைப் பொறுத்தவரையில் விவாதங்களில் பங்கேற்பதில் தேனி எம்.பி. ரவீந்திரநாத் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளார். 69 விவாதங்களில் இவர் பங்கேற்றுள்ளார்.

விழுப்புரம் எம்.பி. டி.ரவிக்குமார் அதிகப்படியான தனிநபர் மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளார். மொத்தம் 4 தனிநபர் மசோதாக்களை இவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

பாரிவேந்தர் எம்.பி. 2 தனிநபர் மசோதாக்களை அறிமுகத்தியுள்ளார். அடுத்தபடியாக விசிக எம்.பி. திருமாவளவன் 3 தனிநபர் மசோதாக்களையும், திமுக எம்.பி. கனிமொழி 2 தனிநபர் மசோதாக்களையும் தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, விஷ்ணுபிரசாத் ஆகியோர் தலா 2 தனிநபர் மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். தவிர காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் ஒரு தனிநபர் மசோதாவைப் பதிவு செய்துள்ளார்.

தருமபுரி எம்.பி. செந்தில்குமார் அதிகப்படியான கேள்விகளை எழுப்பியுள்ளார். இவர் 267 கேள்விகளைக் கேட்டுள்ளார். மக்களவை எம்.பி.க்களில் திமுக எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மட்டுமே எவ்விதக் கேள்வியும் எழுப்பவில்லை.

வருகைப் பதிவிலும் இவரே மிக மோசம். 40% மட்டுமே பதிவாகியுள்ளது. தருமபுரி எம்.பி. செந்தில்குமார் 99 விழுக்காடு வருகைப் பதிவு செய்து முதலிடத்தில் உள்ளார்.

நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை முன்வைக்க நல்ல நல்ல உத்திகள் இருக்கின்றன. அவற்றை நமது எம்.பி.க்கள் தான் சரிவரப் பயன்படுத்துவதில்லை. தனிநபர் மசோதாக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவற்றைப் பயன்படுத்தி நிறைய காரியம் சாதிக்கலாம். தமிழக எம்.பி.க்கள் இன்னும் திறம்பட செயல்பட வேண்டும் என இந்த கணிப்பை வெளியிட்டுள்ள ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷனின் நிறுவனர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x