Published : 05 Jan 2022 05:23 PM
Last Updated : 05 Jan 2022 05:23 PM

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு: ஜன.16-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்குமா?

பிரதிநிதித்துவப் படம்.

மதுரை: இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பால் ஜல்லிக்கட்டுப் போட்டிகளும், பிரதமர் மோடி 12-ம் தேதி நடக்கும் பொங்கல் விழாவும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் தொற்றும் மற்றொருபுறம் பரவி வருகிறது. ஆனால், பரிசோதனை ஆய்வகங்கள் போதுமான அளவு இன்னும் இல்லாததால் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு முழுமையாக தெரியவில்லை. அதனால், 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறது. வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

விருதுநகர், மதுரைக்கு பிரதமர் மோடி வரும் 12-ம் தேதி வருகை, 14, 15 மற்றும் 16-ம் தேதிகளில் பொங்கல் பண்டிகை மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பதால் பொங்கல் பண்டிகை வரை ஊரடங்கு தமிழகத்தில் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்றும், அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஜனவரி 4-ம் தேதி ஒரே நாளில் 2,731 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதனால் கரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல், நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் அன்று நடந்து வந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் சனிக்கிழமையன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், 12-ம் தேதி மதுரை, விருதுநகர் வரும் பிரதமர் மோடி வருகை எந்தளவுக்கு உறுதியாகும் என்பது தெரியவில்லை. மேலும், பொங்கல் பண்டிகை நிகழ்ச்சிகள், அதனையோட்டி நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்குமா அல்லது ரத்தகுமா என்பது தற்போது வரை உறுதி செய்யபப்டவில்லை. நேற்று முன்தினம் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படும் என்று கூறி வந்தார்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வரும் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கும். அன்று ஊரடங்கு இருக்கும்போது ஜல்லிக்கட்டு நடக்க வாய்ப்பில்லை. அதற்காக பாரம்பரியமாக 14-ம் தேதி அவனியாபுரம், 15-ம் தேதி பாலமேடு, 16-ம் தேதி அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மற்ற நாட்களில் தேதியை மாற்றி வைக்க வாய்ப்பில்லை. அதனால், தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி விவகாரத்தில் எந்த முடிவை அறிவிக்கப்போகிறது என்பது தெரியவில்லை. அதுபோல், 12-ம் தேதி பிரதமர் மோடி மதுரையில் பங்கேற்கும் பொங்கல் விழாவும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் நடராஜகுமாரிடம் கேட்டபோது, ''ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவது பற்றி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடக்கிறது. அதற்கான அழைப்பு வந்துள்ளது. அதன்பிறகே தெரிய வரும்'' என்றார்.

மாவட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''தற்போது வரை ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பாதுகாப்பாக கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கான ஏற்பாடுகளை நடக்கிறது. ஆனால், நேற்று முன்தினம் ஒரே நாளில் தொற்று அதிகரித்ததாலே தற்போது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அலங்கநால்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை காண தமிழகம் முழுவதும் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள். தென் மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை போட்டிகளில் பங்கேற்க வைக்க வாகனங்களில் அழைத்து வருவார்கள். அதனால், ஊரடங்கு அறிவிப்பால் அவர்கள் வீடுகள் திரும்புவதிலும் சிக்கல் எழலாம். அரசு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதில் உறுதியாக இருந்தால் அதற்கான வழிகாட்டுதலை அறிவிக்கும். அதன்படி போட்டியை நடத்துவோம்,'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x