Published : 05 Jan 2022 04:38 PM
Last Updated : 05 Jan 2022 04:38 PM
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தும், மீனவர்களின் படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை நாட்டுடமையாக்கியும் மன்னார் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தென்னரசு, லியோன், பீட்டர் கருப்பையா உள்ளிட்ட 6 பேருக்குச் சொந்தமான விசைப்படகுகளையும் அதிலிருந்த 43 மீனவர்களையும், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற சபரிதாஸ், அருளானந்தம் ஆகிய இருவருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளையும் அதிலிருந்த 12 மீனவர்களையும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டிணத்திலிருந்து இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த மீனவர்கள் 13 பேரையும் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து அனுமதியின்றி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர் தனித்தனியாக சிறைப்பிடித்து யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஒவ்வொருவரையும் கையை உயர்த்தி நிற்கச் செய்து அவர்கள் மீது கிருமி நாசினி பீய்ச்சி அடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
68 தமிழக மீனவர்களையும் ,10 விசைப் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் டிசம்பர் 20 தேதியிலிருந்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என தொடர்ப் போராட்டங்களை நடத்தினர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சங்கர்லால் தலைமையில், ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள் இடையிலான பேச்சு வார்த்தையின்போது மீனவர்களை மீட்பதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதால் வேலை நிறுத்தைத்தை கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று ஜனவரி 3 திங்கட்கிழமையிலிருந்து மீண்டும் கடலுக்குச் சென்று வருகின்றனர்.
வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வழக்கு இலங்கையில் உள்ள மன்னார் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் அடிப்படையில் 12 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி சிவக்குமார் உத்திரவிட்டார்.
மேலும், மீனவர்களின் இரண்டு விசைப்படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கப்படுகிறது என்றும் மன்னார் நீதிமன்றம் உத்திரவிட்டது. படகுகளுடன் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தமிழக மீனவர்களுக்கு இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் ஜனவரி 13 வரையிலும், ஜெகதாப் பட்டிணம் மீனவர்கள் ஜனவரி 18 வரையிலும் நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT