Published : 05 Jan 2022 03:48 PM
Last Updated : 05 Jan 2022 03:48 PM
சென்னை: நீட் விலக்கு அளிப்பது தொடர்பான உத்தரவாதம், புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் இல்லாத ஆளுநர் உரை ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில ஆளுநர் ஆற்றிய உரை தொடர்பாக தமிழக மக்கள் ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த வேளையில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது தொடர்பான எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. தமிழ்நாட்டை பாதிக்கும் முக்கிய சிக்கல்களில் கூட தெளிவான செயல்திட்டங்கள் இடம் பெறாத ஆளுநரின் உரை ஏமாற்றம் அளிக்கிறது.
2022-ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு ஆர்.என்.ரவி ஆற்றிய முதல் உரை என்பதாலும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்யவிருக்கும் முழுமையான முதல் நிதிநிலை அறிக்கைக்கு முந்தைய ஆளுநர் உரை என்பதாலும் அதில் இடம்பெறப்போகும் அறிவிப்புகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புகள் மக்களிடம் இருந்தன. அது மிகவும் இயல்பானதும் கூட.
ஆனால், ஆளுநர் உரையில் 2022-23ம் ஆண்டில் தமிழக அரசு செயல்படுத்தப்போகும் திட்டங்கள் குறித்த எந்த முன்னோட்ட அறிவிப்பும் இல்லை. கரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தியது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக தமிழக அரசை பாராட்டும் வாசகங்கள் மட்டும்தான் ஆளுநர் உரை முழுவதும் நிறைந்துள்ளன. மக்களுக்கு பயனளிக்கும் அறிவிப்புகள் தேடினாலும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களும், பெற்றோரும் இப்போது எதிர்நோக்கியுள்ள மிக முக்கிய பிரச்சினை வரும் கல்வியாண்டிலிருந்து தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுமா என்பது தான். அது குறித்து ஆளுநர் உரையில் எந்த உத்தரவாதமும் இடம் பெறவில்லை.
நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு; அத்தகைய தேர்வுகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்க்கும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் யாருக்கும் பயனில்லை. நீட் விலக்கு சட்டம் பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்டு, 4 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு ஆளுநரின் ஒப்புதல் கூட இன்னும் கிடைக்கவில்லை. அதைப் பெறுவதற்கும், அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கும் அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பதை ஆளுநரின் வார்த்தைகளால் அறிவிக்கச் செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாதது ஏமாற்றமளிக்கிறது.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு, மக்களுக்கான நிவாரண உதவி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை, மாதந்திர மின் கட்டண வசூல் போன்ற திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்தும் ஆளுனர் உரையில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. இவற்றை வைத்துப் பார்க்கும் போது ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுனர் உரையுடன் தொடங்க வேண்டும் என்ற கடமையை நிறைவேற்றுவதற்காக மட்டும்தான் ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.
ஆளுநர் உரை மக்களை எந்த வகையிலும் கவரவில்லை. தமிழக சட்டப்பேரவையில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவுள்ள ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் முதல்வரின் பதிலுரையிலாவது தமிழக மக்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT