Published : 05 Jan 2022 03:40 PM
Last Updated : 05 Jan 2022 03:40 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில இறுதி வாக்காளர் பட்டியல் வெளயிடப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 10,10,455 வாக்காளர்கள் இருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஜன.5) வெளியிட்ட தகவல்: ‘‘இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க 1.1.2022-ஐ தகுதி பெறும் தேதியாகக் கொண்டு, புதுச்சேரி ஒன்றிய ஆட்சி பரப்பில் அடங்கிய 30 சட்டப்பேரவை தொகுதிகளின் 2022-ம் ஆண்டுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணி கடந்த 1.11.2021 முதல் 30.11.2021 வரை நடைபெற்றது. இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்த சுருக்குமுறை திருத்த பணியின்போது வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட உரிமை கோரிக்கைகளையும், ஆட்சேபணைகளையும், அவற்றின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பற்றிய விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 1.11.2021 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 9,97,244 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இதில் புதிதாக 19,997 பேர் (2.00 சதவீதம்) சேர்க்கப்பட்டனர். 6,786 பேர் (0.68 சதவீதம்) நீக்கப்பட்டனர். வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி புதுச்சேரி - 7,78,616 (ஆண்-36,73,02, பெண்-41,12,15, மூன்றாம் பாலினத்தவர்-99), காரைக்கால் - 1,61,903 (ஆண்-74,832, பெண்-87,050, மூன்றாம் பாலினத்தவர்-21),
மாஹே - 31,374 (ஆண்-14,353, பெண்- 17, 021), ஏனாம் - 38,562 (ஆண்- 18,623, பெண்- 19,939) என மொத்தம் 10,10,455 (ஆண்கள்-4,75,110, பெண்கள்-5,35,225 மூன்றாம் பாலினத்தவர்-120) வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளைத் திருத்துவதற்கான விண்ணப்பம் 4,921 மற்றும் தொகுதிக்குள் இடமாறுதலுக்கான விண்ணப்பம் 4,938 பெறப்பட்டு அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இவற்றில் வில்லியனூர் தொகுதியில் அதிகபட்டசமாக 43,358 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக உருளையன்பேட்டை தொகுதியில் 24,750 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.5) வெளியிடப்பட்டு 7 நாட்களுக்கு (பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து) அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படும். புதியதாக பதிவு செய்த 18 - 19 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்க்காமல், விடுபட்ட நபர்கள் தங்களின் பெயரை தொடர் திருத்தத்தில் 5.1.2022 முதல் வேட்பு மனு தாக்கலின் இறுதி நாள் வரை சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி, வாக்காளர் பதிவு அதிகாரியை தொடர்பு கொண்டு சேர்த்துக்கொள்ளலாம். பொதுமக்கள் தங்களின் தேர்தல் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள 1950 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி (மாஹே, ஏனாம் உட்பட) மாவட்டத்திலுள்ள 25 சட்டப்பேரவை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி இன்று புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் பங்கேற்று அங்கீகரிக்கப்பட்ட தேசய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இறுதி வாக்காளர் பட்டியலை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT