Published : 05 Jan 2022 02:04 PM
Last Updated : 05 Jan 2022 02:04 PM
சென்னை: ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பால்வளத் துறை அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கிடைக்காமல் போக, கடந்த மாதம் விருதுநகரில் நடைபெற்ற அதிமுக-வின் கண்டன ஆர்ப்பாட்டத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு கிளம்பிய ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். தலைமறைவான அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை தேடிவந்தது.
அவரை பிடிக்க, அவரது உறவினர்கள், நெருங்கிய நட்பு வட்டத்தினர், நெருங்கிய கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்டோரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவந்தனர். கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி பாண்டிச்சேரி திருப்பதி திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டு தேடி வந்தனர். சுமார் 20 நாட்கள் தேடுதலுக்கு பிறகு, கர்நாடகாவில் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவின் ஹசன் பகுதியில் தங்கியிருந்த அவர் கைதாகியுள்ளார். ஹசன் பகுதியில் உள்ள பி.எம்.சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது ராஜேந்திர பாலாஜியை போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்துள்ளது. வழிமறித்து போலீஸ் கைது செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதையடுத்து காவல்துறை வாகனத்தில் அவரை தமிழ்நாடு கொண்டுவரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தலைமறைவாக இருந்தபோதே முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி விண்ணப்பித்திருந்தார். கடந்த மாதம் 17ஆம் தேதி அவரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்த நிலையில், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவிருந்த நிலையில் இன்று அதிரடியாக தனிப்படை போலீஸ் அவரை கைது செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT