Published : 05 Jan 2022 12:29 PM
Last Updated : 05 Jan 2022 12:29 PM
சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, பொங்கல் பரிசுத் தொகை வழங்காதது, அம்மா மினி க்ளினிக்குகள் மூடல் உள்ளிட்ட காரணங்களைக் கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. வழக்கமாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தட்டு மூலம் இசைக்கப்படும். ஆனால், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை சென்னை இசைக்கல்லூரியின் இசைக் கலைஞர்கள் நேரடியாக பாட கூட்டத்தொடர் தொடங்கியது.
ஆளுநர் உரையைத் தொடங்கியவுடனேயே அவையில் ஒருபுறம் கூச்சலும், குழப்பமும் எழுந்தது. ஆளுநருக்கு எதிராக விடுதலை சிறுத்தைக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோஷங்களை எழுப்பினர். நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதிமுகவினர் வெளிநடப்பு: அதேவேளையில், அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையைப் புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு அதிமுக உறுப்பினர்களுடன் வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "தமிழகத்தில் கடந்த 8 மாத திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஆட்சி பொறுப்பேற்ற 8 மாத காலத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்செய்திகள் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் தமிழகத்தில் உருவாகி வருகிறது. காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கின்ற முதல்வர், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை கவனிப்பதில் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை, இதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிவது நிரூபணமாகிறது.
போதைப்பொருட்கள் அதிகரிப்பு: தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது. இன்றுகூட ஆந்திராவிலிருந்து 98 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டு பிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து டன் கணக்கில் குட்கா கொண்டுவரப்பட்டு தமிழகம் முழுவதும் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் போதைப்பொருள் விற்பதை தடுக்க காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல்துறை தலைவரே அறிக்கை விட்டிருக்கின்றார். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை நடப்பது தெளிவாக தெரிகிறது. இந்த போதைப் பொருட்களினால் இளைஞர்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதை, கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம், கட்டப்பஞ்சாயத்து மீண்டும் தலைவிரித்தாடுகின்றன.
வெள்ளத்தில் மக்கள் துன்பம்: வடகிழக்குப் பருவமழையின்போது, சென்னையில் பெய்த மழையால், சென்னை மாநகரத்தில், பெரும்பாலான வீதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் வேதனைக்குட்பட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை, உடை கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை, மருத்துவ வசதி முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. அதோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். முதல்வர் ஸ்டாலின், வெள்ளநீர் தேங்கியதற்கு முந்தைய அதிமுக அரசுதான் காரணம் என்று ஒரு தவறான பொய்யான பிரச்சாரத்தை செய்கிறார். ஸ்டாலின் 2021 மே மாதமே தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். வடகிழக்கு பருவமழை 10-வது மாதம்தான் தொடங்குகிறது. கிட்டத்தட்ட 5 மாத காலம் இடைவெளி இருக்கிறது. 5 மாத காலத்தில் திமுகதான் ஆட்சியில் இருந்தது. முதல்வராக ஸ்டாலின்தான் இருக்கிறார். நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டு அவர்கள் நேரடியாக அந்தந்த பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு தூர் வாருகின்ற நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் ஸ்டாலின் தலைமையிலிருந்த திமுக அரசு அவ்வாறு செய்யாத காரணத்தினால் சென்னை மாநகரத்தின் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் தேங்கி, மக்கள் துன்பத்திற்கு உள்ளாகினார்கள்.
சென்னையில் நிவாரணம் இல்லை: 2015 பெருமழையின்போது அதிமுக அரசு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிவாரணத் தொகை வழங்கினார்கள். ஆனால் திமுக அரசு அதைப்போல எவ்வித நிவாரணத் தொகையும் வழங்கவில்லை. கடந்த தைப்பொங்கலில் மக்கள் சிறப்பாக பொங்கல் கொண்டாட ரூ.2500 பொங்கல் பரிசு வழங்கியது அதிமுக அரசு. ஆனால் தற்போதைய திமுக அரசு பொங்கல் பரிசு வழங்கவில்லை, இது மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கின்றது.
டெல்டா மக்களுக்கும் நிவாரணம் இல்லை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பெய்த கன மழையால் டெல்டா மாவட்டங்களில் இருந்த பயிர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றுவரை நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. தற்போது வடகிழக்கு பருவமழையில் பெய்த கனமழையாலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளசேதத்தை திமுக அரசு கணக்கிட்டது. வெள்ள நிவாரணமும் அறிவித்தது. ஆனால் இன்றுவரை வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது.
அம்மா கிளினிக்குகள்: அதேபோல ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் 1900 அம்மா மினி கிளினிக்குகள் நாங்கள் தொடங்கினோம். ஆனால் ஏழை மக்கள் மீது அக்கறையில்லாத தற்போதைய திமுக அரசு அதை மூடியுள்ளது.
திமுக அரசின் கைப்பாவையாக காவல்துறை: விசாரணை என்ற பெயரில் கட்சி நிர்வாகிகளை அழைத்துச் செல்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். அழைத்துச் சென்று 2, 3 நாட்கள் எங்கு வைத்திருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. ஒருவரை அழைத்துச் சென்றால் 24 மணிநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால் அந்த சட்டத்தை மீறி அதிமுக நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய்வழக்கு போடுவது கண்டிக்கத்தது. இன்றைக்கு காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுகவின் கைப்பாவையாக காவல்துறை செயல்பட்டு வருவதையெல்லாம் கண்டித்துத்துதான் இன்று அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT