Published : 05 Jan 2022 11:09 AM
Last Updated : 05 Jan 2022 11:09 AM
சென்னை : எந்த ஒரு ஆலைகளிலும் இனி விபத்து நடைபெறாமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்து பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"தமிழக அரசு, பட்டாசு ஆலையில் விபத்து, உயிரிழப்பு நிகழாமல் இருப்பதற்கும், பாதுகாப்பாக பட்டாசுத் தயாரிப்பதற்கும் ஏற்ப உரிய கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடு, விதிமுறைகள் ஆகியவற்றை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மேலும் பலர் படுகாயமடைந்திருப்பதும் வருத்தத்துக்குரியது. அவர்களுக்கு உயர் தர சிகிச்சை அளித்து விரைவில் குணமடைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவ்வப்போது பட்டாசு ஆலையில் நிகழும் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதும், ஆலை பாதிக்கப்படுவதும் வேதனைக்குரியது. இதற்கு காரணம் என்ன. பட்டாசு ஆலைகள் செயல்படுவதற்கு வழங்கப்படும் உரிமத்தில் உள்ள விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும். இதற்காக பட்டாசு ஆலைகளை கண்காணித்து, முறையாக செயல்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால் பட்டாசுத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் கூலித்தொழிலாளர்கள் என்ன செய்வார்கள். அவர்களும் பாதுகாப்பாக தொழிலில் ஈடுபட வேண்டிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.
கவனக்குறைவு, விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதில்லை உள்ளிட்ட எக்காரணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காத ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதில் எவ்வித சமரசத்துக்கும் இடம் இல்லை. உயிர்ப்போக வாய்ப்புண்டு எனத்தெரிந்தும் அஜாக்கிரதையாக பட்டாசுத் தொழிலை நடத்துவதும், தொழிலில் ஈடுபடுவதும் சரியில்லை.
எனவே தமிழக அரசு, இனியும் பட்டாசுத் தயாரிக்கும் ஆலைகளில் பட்டாசுத் தயாரிக்கும் வேளையிலும், பட்டாசுத் தயாரிக்காமல் இருக்கின்ற வேளையிலும் எவ்வித விபத்தும் நடைபெறாமல் இருக்க உரிய தொடர் நடவடிக்கை எடுத்து பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று தமாகா சார்பில் வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT