Published : 05 Jan 2022 08:45 AM
Last Updated : 05 Jan 2022 08:45 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கவுள்ள நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
காலை 9.15 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டம் கலைவாணர் அரங்கிலேயே நடைபெறுகிறது.
சட்டப்பேரவைக் கூட்டத்தை எதிர்கொள்வது, என்ன மாதிரியான விவாதங்களை முன்னெடுப்பது, ஆளுநர் உரை மீதான நிலைப்பாடு ஆகியன குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
முதல் கூட்டம் இன்று: தமிழக சட்டப்பேரவைக்கான ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.5-ம் தேதி) காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின் நடைபெறும் பேரவைக்கூட்டம் என்பதால், முதன் முதலாக அவர் உரையாற்றுகிறார்.
இந்தக் கூட்டத்தை தலைமைச் செயலக கூட்ட அரங்கில் நடத்த முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில், தொற்று பரவல் மீண்டும் அதிகரித்ததால் கலைவாணர் அரங்கிலேயே கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதன்படி இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் பேரவை கூட்டம் தொடங்குகிறது.
இன்று காலை, 9.50 மணிக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துணைத்தலைவர் கு.பிச்சாண்டி உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். அதன்பின், பேரவை அரங்குக்குள் வரும் ஆளுநர், காலை 10 மணிக்கு தனது உரையை வாசிக்கத் தொடங்குவார். தொடர்ந்து, அந்த உரையின் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசிப்பார். அத்துடன், பேரவையின் இன்றைய நிகழ்ச்சிகள் முடிவு பெறும்.
தொடர்ந்து, பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும்.
இந்தக் கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகள், குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது. அதேநேரம் நீட்தேர்வு ரத்து விவகாரம், மழை நிவாரணம், பயிர்பாதிப்பு நிவாரணம் வழங்கப்படாதது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து பேச எதிர்க்கட்சிகள் வாய்ப்பு கேட்கலாம் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT