Last Updated : 23 Mar, 2016 09:19 AM

 

Published : 23 Mar 2016 09:19 AM
Last Updated : 23 Mar 2016 09:19 AM

ஆர்டிஐ சட்டத்தில் தகவல் பெற ரூ.70 ஆயிரம் கட்டணம்: ரயில்வேயின் கடிதத்தால் பயணி அதிர்ச்சி

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற ரூ.70 ஆயிரம் செலுத்துமாறு, பாதிக்கப்பட்ட பயணிக்கு ரயில்வே நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது. இது தகவல் உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி யுள்ளது.

சென்னை கொசப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல் முனிர். இவரது தம்பி அப்துல் நிசார் (16). இவர் கடந்த ஜனவரி 16-ம் தேதி கேரள மாநிலம் கோழிக் கோடு செல்ல மங்களூரு மெயில் ரயிலில் தத்காலில் முன்பதிவு செய்திருந்தார். பயணத்தின் போது, நிசாரிடம் அடையாள அட்டையின் நகல் மட்டுமே இருந் தது. அசல் அடையாள அட்டை இல்லாததால், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அவரை டிக்கெட் பரிசோதகர் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டார். பின்னர், அவரது இருக்கை வேறொரு பயணிக்கு ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து அப்போது ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது.

சம்பவம் குறித்து ரயில்வே துறைக்கு முனிர் புகார் மனு அனுப்பினார். அதற்கு பதில் அளித்த ரயில்வே நிர்வாகம், ‘நிசாரை வழியில் டிக்கெட் பரிசோதகர் இறக்கி விடவில்லை’ என தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, நிசாரின் பெட்டியில் பயணம் செய்தவர்கள் பற்றிய விவரங்களை தரக்கோரி தகவல் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் ரயில்வே துறைக்கு முனிர் கடிதம் அனுப்பினார்.

அதிகாரி தகவல்

இதற்கு ரயில்வே துறையின் பாலக்காடு மண்டல வர்த்தக மேலாளர் அளித்துள்ள பதிலில், ‘‘நீங்கள் குறிப்பிட்டுள்ள தினத்தில் எஸ்-6 பெட்டியில் 83 பேர் பயணம் செய்துள்ளனர். ஒரு பயணிக்கு தலா ரூ.750 மற்றும் 14 சதவீத வரி என மொத்தம் ரூ.70,965 செலுத்தினால் பயணிகளின் விவரம் வழங்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

இதனால், முனிர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘அசல் அடையாள அட்டை இல்லாததால் என் தம்பி நிசாரை வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுவிட்டு, அந்த இருக்கையை டிக்கெட் பரிசோதகர் பணத்துக்காக வேறொரு பயணிக்கு ஒதுக்கியுள்ளார். இந்த பாதிப்புக்கு நஷ்டஈடு பெற தகவல் உரிமை சட்டத்தில் விளக்கம் கேட்டால், அதிகப்படியான கட்டணத்தை செலுத்துமாறு ரயில்வே நிர்வாகம் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

இதுபற்றி சமூக ஆர்வலர் தரணிதரன் கூறும்போது, ‘‘தகவல் உரிமை சட்டம் பகுதி-2, பிரிவு 7(5)-ன் படி தகவல் அளிக்க நியாயமான கட்டணம் வசூலிக்கலாம் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதிக தொகையை செலுத்துமாறு ரயில்வே கூறியிருப்பது ஆச்சர்யமாக உள்ளது’’ என்றார்.

மண்டல ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் குழு முன்னாள் தலைவர் பாஸ்கரன் கூறியபோது, ‘‘ஆர்டிஐ மூலம் தகவல் பெற ஒரு பக்கத்துக்கு ரூ.2 கட்டணம் என்றுதான் ரயில்வே கால அட்டவணை புத்தகத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தவறு செய்துவிட்ட ஊழியரை காப்பாற்றுவதற்காக ரயில்வே நிர்வாகம் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது’’ என்றார்.

இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இப்பிரச்சினையில் ரயில்வே தரப்பில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் சம்பந்தப்பட்ட பயணி மேல்முறையீடு செய்து நிவாரணம் பெறலாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x