Last Updated : 13 Mar, 2016 09:33 AM

 

Published : 13 Mar 2016 09:33 AM
Last Updated : 13 Mar 2016 09:33 AM

அதிமுக வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? - பின்னணியில் ஐவர் அணி

அதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றிருந்த ஐவர் அணி ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு அளித்துவிடக் கூடாது என்ப தால்தான் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த காலங்களில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது அதிமுக வின் வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் முதல்வர் ஜெயலலிதா அமைதி காத்து வருகி றார். ஐவர் அணியுடன் நெருக்க மாக இருந்தவர்கள் வேட்பாளர் களாகிவிடக் கூடாது என்பதில் அதிமுக தலைமை உறுதியாக உள்ள தால்தான் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது தாமதமாவதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வ நாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோரைக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவே முதல்வருக்கு அடுத்த அதிகார மையமாக வலம் வந்தது. கட்சியில் சாதாரண நகரச் செயலாளர் நியமிப்பது முதல் வேட்பாளர் தேர்வு வரை ஐவர் அணியின் கையே ஓங்கியிருந்தது.

ஆனால், சமீபகாலமாக ஐவர் அணி மீது ஏற்பட்ட அதிருப்தி யின் காரணத்தால், அவர்க ளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வில்லை. அதிமுக வேட்பாளர் நேர்காணலில் இவர்கள் இடம் பெறவில்லை. கட்சி நிகழ்ச்சிகள் தொடங்கி அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் வரை அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

கட்சித் தலைமைக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு சட்டப்பேரவை தேர்தலின்போது முக்கியத்துவம் குறைக்கப்படுவது வழக்கம். அதற்கு செங்கோட்டையன், நயி னார் நாகேந்திரன் என பலரை உதாரணமாக கூற முடியும். இதில் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே விதி விலக்காக இருந்தார். ஆனால், இந்தத் தேர்தலில் அவர் உட்பட ஐவர் அணிக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை, மாவட்டச் செய லாளர்கள் போன்ற வகைகளிலேயே வேட்பாளர் பரிந்துரையை அதிமுக தலைமை பெற்றுள்ளது. வேட் பாளர் பட்டியலில் ஐவர் அணி ஆதர வாளர்களின் தலையீடு இருக்கக் கூடாது என்பதாலேயே அவர்களின் ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். பெறப்பட்டுள்ள பட்டியலும், தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இத னால்தான் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள் ளது.

எனினும், ஐவர் அணி முற்றிலுமாக புறக்கணிக்கப்படவில்லை. அவரவர் பகுதிகளில் 3 முதல் 4 மாவட்டங்கள் வரை சேர்த்து தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டும் என்று தலைமை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஐவர் அணி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், திண்டுக்கல் மாவட்ட அவைத் தலைவர் சீனி வாசன், தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர்கள் நயினார் நாகேந்திரன், கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, அதிமுக விவசாய பிரிவுத் தலைவர் துரை.கோவிந்தராஜன், குடிசை மாற்று வாரிய முன்னாள் தலைவர் மறைந்த கு.தங்கமுத்துவின் சகோதரர் என சீனியர்களுக்கு அதிமுக தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x