Published : 02 Jun 2014 08:04 AM
Last Updated : 02 Jun 2014 08:04 AM
மீன்பிடி தடைக் காலம் முடிந்து, மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை அரசைக் கண்டித்த பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா, இந்த நிலை தொடர்ந்தால் தக்க பதிலடி கொடுக்க மத்திய அரசு தயங்காது என்று எச்சரித்தார்.
அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: “அமைச்சரவைக் குழுக்களை பிரதமர் கலைத்திருப்பதன் மூலம், அந்தந்தத் துறையைச் சேர்ந்த அனைத்து விஷயங்களுக்கும் அமைச்சர்களே பொறுப்பேற்கும் நிலை உருவாகியுள்ளது.
காஷ்மீர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்யும். ஏற்கெனவே மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசின் தவறானக் கொள்கையால்தான் தற்போது டீசல் விலை உயர்ந்துள்ளது. இது தற்காலிகமானதுதான். விரைவில் பிரதமரால் இதற்காக ஒரு கொள்கை வகுக்கப்பட்டு, விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாஜக அரசு, எந்தப் பிரச்சினையையுமே சுமுகமாகப் பேசித் தீர்க்கும். இந்த அடிப்படையில்தான் மத்திய அரசின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் அழைக்கப்பட்டார். தற்போது, மீன்பிடித் தடைக்காலம் முடிந்த நிலையில், மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் கண்டனத்துக்குரியது. இந்த நிலை தொடர்ந்தால், தக்க பதிலடி கொடுக்க மத்திய அரசு தயங்காது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT