Published : 05 Jan 2022 12:22 PM
Last Updated : 05 Jan 2022 12:22 PM
தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் முழு நீள கரும்பும் அளிக்கப்படுவதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கரும்பு அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களின் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பது செங்கரும்பு. இந்த செங்கரும்பை விவசாயிகள் ஏப்ரல் மாதத்தில் விதைத்து, மார்கழி மாத இறுதியில் அறுவடை செய்வது வழக்கம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டில் சூரக்கோட்டை, வரவுக்கோட்டை, கத்தரிநத்தம், காசவளநாடு புதூர், நாய்க்கான்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, அணைக்கரை, நாச்சியார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வியாபாரிகள் கடந்த சில நாட்களாக கரும்பு விவசாயிகளை அணுகி கரும்பு ஒன்றுக்கு ரூ.15 வரை விலை பேசி முன்தொகையை கொடுத்திருந்தனர். பொங்கலுக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால், கரும்பை வெட்டி சென்னை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட வெளியூருக்கு அனுப்ப வேண்டியிருப்பதால், கரும்பு வெட்டும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு முழு நீள கரும்பையும் வழங்குவதால், அதற்கு தேவையான கரும்பை உள்ளூரிலேயே கூட்டுறவுத் துறையினர் கொள்முதல் செய்து விநியோகம் செய்து வருகின்றனர். இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கரும்பு பயிரிட்ட கத்தரிநத்தம் விவசாயி வீரமணி கூறியது: பொங்கலுக்காக இப்பகுதியில் செங்கரும்பை வழக்கமாக பயிரிட்டு வருகிறோம். இந்தாண்டு சாகுபடிக்கான செலவு கூடுதலாக ஏற்பட்டுள்ளது. விதை, உரம், தண்ணீர் பாய்ச்சும் செலவும் அதிகரித்துள்ளது. ஆனால், கரும்புக்கான விலை, கடந்தாண்டு விற்பனை செய்த விலையில் தான் கிடைக்கிறது. விவசாயிகள் ஒரு கரும்பை ரூ.15-க்கு விற்கிறார்கள். வியாபாரிகள் அதை ரூ.25-க்கு விற்கின்றனர்.
தற்போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் முழு நீள கரும்பையும் வழங்குவதால், செங்கரும்புக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், தற்போது கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வயலுக்கு நேரில் வந்து விவசாயிகளை அணுகி செங்கரும்பை வாங்கிச் செல்கின்றனர். தற்போது பெரிய அளவில் மழை இல்லாததால் கரும்பு வெட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT