Published : 05 Jan 2022 10:17 AM
Last Updated : 05 Jan 2022 10:17 AM

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் முறைகேடாக பணிகள் நடைபெற்றால் சிபிசிஐடி விசாரணை நடத்துமாறு முதல்வருக்கு கடிதம் எழுதுவேன்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன். அருகில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் புதிய பேருந்து நிலையத்தை கரோனா மாதிரி கட்டி வருகின்றனர். திருத்திய பணிகளை செய்யாமல் முறைகேடாக பணிகள் நடைபெற்றால் சிபிசிஐடி விசாரணை நடத்துமாறு முதல்வருக்கு கடிதம் எழுதுவேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் திருத்தப்பட்ட மறு மதிப்பீட்டின்படி ரூ.50.13 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியின் தற்போதைய நிலை குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, பேருந்து நிலைய கட்டுமான பணி வரைபடத்தை ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன், ‘‘செல்லியம்மன் கோயில் இடத்தை பேருந்து நிலைய நுழைவுவாயில் பகுதிக்காக எடுத்துக் கொண்டு அறநிலையத்துறைக்கு மாற்று நிலத்தை வழங்கவும் ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். மேலும், புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணியில் சில மாற்றங்களை செய்வதுடன் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அழகுற இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன்கூறும்போது, ‘‘ வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் பல முடிக்கப்படாமல் உள்ளன. இந்த பணிகளை நகர்ப்புற தேர்தலுக்குள் முடிக்காவிட்டால் அதிகாரிகள் தான் பொறுப்பு.

புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளைப் பார்த்தால் கரோனா மாதிரி உள்ளது. பேருந்து நிலையத்தை தாறுமாறாக கட்டி வருகின்றனர். இரண்டு பக்கமும் சிறப்பான முகப்பை அமைத்து கட்ட வேண்டும் என கூறியிருக்கிறேன். பக்கத்தில் உள்ள தனியார் இடங்கள் பாதிக்காமல் இருக்க பள்ளத்தில் தண்ணீர் தேங்கும் அளவுக்கு பேருந்து நிலையத்தை கட்டி வருகின்றனர்.

வரும் காலங்களில் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அடிக்கடி வந்து ஆய்வு செய்வேன். இதில், முறைகேடாக கட்டிட பணிகள் நடைபெறுவது தெரியவந்தால் சிபிசிஐடி மூலம் விசாரணை நடத்த முதல்வருக்கு கடிதம் எழுதுவேன். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காட்பாடி தொகுதியில் கல்லூரி, மருத்துவமனை தொடக்க விழாவுக்கு முதல்வரை நேரில் அழைக்கலாம் என்று இருக்கிறேன். அப்போது, விளையாட்டு மைதானத் தையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமலுவிஜயன், வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x