Published : 04 Jan 2022 09:30 PM
Last Updated : 04 Jan 2022 09:30 PM
புதுச்சேரி: இன்றைய காலகட்டத்தில் சிறப்பான வாழ்க்கையை வாழ நிச்சயம் யோகா கலையைக் கற்றுக்கொள்ள வேண்டுமென ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் 27-வது அகில உலக யோகா திருவிழா இன்று (ஜன. 4) மாலை தொடங்கியது. புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் நடைபெற்ற தொடக்க விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு யோகா விழாவைத் தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது:
‘‘புதுச்சேரி சித்தர்களின் பூமி. சித்தர்கள் அனைவரும் யோகாவைப் பயிற்றுதான் நெடுநாள் வாழ்ந்தார்கள். பிரதமர் நரேந்திர மோடி முயற்சியினால் ஜூன் 21-ம் தேதியை உலக யோகா தினமாகக் கொண்டாடுகிறோம். இதனால் சமீபகாலமாக யோகா பிரபலமாகப் பேசப்படுகிறது. ஆனால், புதுச்சேரியில் 27-வது ஆண்டு விழாவாக நடைபெறுகிறது என்பதன் மூலம் நீங்கள் (மக்கள்) எல்லோரும் யோகாவின் பெருமையை எவ்வளவு முன்னாள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதைத்தான் இது காண்பிக்கிறது. இப்போது கரோனா காலம். யோகாவினால் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியுமா? ஒடுக்க முடியுமா? யோகா மருந்தா? யோகாவால் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியுமா? இப்படியெல்லாம் பல கேள்விகள் உள்ளன. நிச்சயமாக யோகா கற்றுக்கொள்பவர்கள் எந்தக் கவலையும் இல்லாமல், ஒருவேளை உடல் பாதித்தாலும் மனபாதிப்பு இல்லாமல் மீண்டு வருவார்கள் என்பது சமீபகாலமாக விஞ்ஞானம் மூலம் நிரூபணமாகியுள்ளது.
யோகாவால் நோய் கட்டுப்படுமா? என்பதனை வேறு யாராவது சொன்னால் நம்ப முடியாது. ஆனால், அலோபதி மருத்துவரான நானே சொல்கிறேன் யோகா நிச்சயமாக நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. சர்க்கரை நோய், தைராய்டு உள்ளிட்ட நோய்களுக்குப் பலனுள்ளதாக இருக்கிறது.
யோகா இயற்கையோடு ஒன்றியது. இந்தியாவில் யோகாவைச் செய்கிறோமோ இல்லையோ, உலகம் முழுவதும், குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் கூட ஜூன் 21-ம் தேதி யோகாவைப் பின்பற்றிக் கொண்டாடுகிறார்கள் என்றால் அதுதான் நம் நாட்டின் பெருமை. இந்தியக் கலை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்றைய காலகட்டத்தில் சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால் நிச்சயமாக யோகா கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும்’’.
இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
‘‘புதுச்சேரி வருவாயே சுற்றுலா மூலமாகத்தான். சிறிய துறையாக இருந்தது. இப்போது புதுச்சேரியின் வருவாயைப் பெருக்குகின்ற பெரிய துறையாக இருக்கின்றது. சுற்றுலா மூலம் வருவாயைப் பெருக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். சிறிய புள்ளியான புதுச்சேரியை எல்லோரும் உற்றுநோக்குகின்றனர். ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்து மகிழ்ந்து செல்வதைப் பார்க்கிறோம்.
புதுச்சேரி அமைதியான, அழகான இடம். ஆன்மிக பூமி. இன்றைக்கு கரோனா பெருந்தொற்று சவாலாக இருந்துகொண்டிருக்கிறது. உடலில் எதிர்ப்பு சக்தி இருந்தால் தொற்று நம்மைத் தாக்காது என்ற நிலை இருக்கிறது. உணவு மற்றும் யோகா போன்ற பயிற்சிகள் இருந்தால் தொற்று நமக்கு ஏற்படாது. கரோனா தொற்றை வெல்வோம் என்ற நிலையில்தான் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பிரதமரும் அதனை வலியுறுத்தி வருகிறார். சவாலாக இருக்கின்ற கரோனாவை நம்முடைய பெரிய நாட்டில் வென்று கொண்டிருக்கிறோம்.
நோயற்ற வாழ்வு வாழ யோகா அடிப்படையாக இருக்கிறது. இப்போது இந்த யோகா திருவிழா. அடுத்து வரும் 12-ம் தேதி அகில இந்திய இளைஞர் விழா. இதில் 7,500 இளைஞர்கள் புதுச்சேரியில் பங்குபெற இருக்கின்றனர். விழாவை பிரதமர் தொடங்கி வைக்க வருகை தர இருக்கிறார். புதுச்சேரியை மேம்படுத்துவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரியின் அனைத்து இடங்களையும் சுற்றுலாத் தளமாகக் கொண்டு வரவேண்டும் என்பது அரசின் எண்ணம்.
புதுச்சேரி பழமையான நகரம். பழமையான கட்டிடங்கள் உள்ளன. இப்போது நமக்கு இருக்கின்ற சிரமம் என்னவென்றால், பழமையான கட்டிடங்களைப் பாதுகாப்பதுதான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்துப் பழமையான கட்டிடங்களையும் பாதுகாக்கின்ற நடவடிக்கையை நாம் எடுத்து வருகிறோம். தொடர்ந்து எடுப்போம்.’’
இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.
விழாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன், சபாநாயகர் செல்வம் மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். வருகின்ற 7-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் திருவிழா ஜெயராம் திருமண நிலையம், அலையன்ஸ் பிரான்சிஸ் கருத்தரங்கக் கூடம், கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள கைவினை அங்காடி மற்றும் காந்தி திடலில் நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 1,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT