Published : 04 Jan 2022 06:56 PM
Last Updated : 04 Jan 2022 06:56 PM
கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது என்று பொதுப்பணிகள் (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முழு நேரம் 595 நியாயவிலைக் கடைகள் மற்றும் பகுதி நேரம் 171 நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 766 நியாயவிலைக் கடைகள் வாயிலாக 4,23,453 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.22.78 கோடி மதிப்பீட்டில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
திருக்கோவிலூர் வட்டம் லாலாபேட்டையில் இன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு அங்கு பேசும்போது, ''தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் குடும்ப அட்டைகளுக்கு ரூ.4,000 வழங்குவதற்கான ஆணையில் கையெழுத்திட்டார்.
அதைத் தொடர்ந்து மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, கிராமப்புறத்தில் நமக்கு நாமே, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், அரசு ஊழியர்களுக்கு 14 சதவிகித அகவிலைப்படி உயர்வு, விவசாயத்துக்குத் தனி நிதிநிலை அறிக்கை எனத் தமிழக அரசு இந்தியாவுக்கு முன்மாதிரியாக மக்களுக்குப் பயன்படும் வகையிலான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துப்படுத்தி திராவிட மாடல் ஆட்சியாகத் திகழ்கிறது'' என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியம் மற்றும் ஏ.ஜே.மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பெ.புவனேஸ்வரி, கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் கீர்த்தனா, வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து ஒன்றியக் குழுப் பெருந்தலைவர்கள், அனைத்துத் துறை அரசு உயர் அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT