Published : 04 Jan 2022 05:37 PM
Last Updated : 04 Jan 2022 05:37 PM
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணியை விரைவுபடுத்தக் கோரி பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜனவரி 7-ம் தேதி தென் மாவட்ட அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் தலைமையில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
பிரதமர் மோடி மதுரையில் பொங்கல் விழாவில் பங்கேற்க வரும் 12-ம் தேதி வருகிறார். ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்கு வந்த பிறகு கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் மதுரைக்கு வந்தார். தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி மீண்டும் மதுரைக்கு வருகிறார். இதனிடையே, மதுரை வரும் பிரதமர் பொங்கல் விழா நிகழ்ச்சியில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்தும் அறிவிப்புகளை வெளியிட வலியுறுத்தி, அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் தென் மாவட்ட அனைத்துக் கட்சி எம்.பி.க்கள், மாநிலத் தலைவர்கள் தலைமையில் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், தொழில்துறையினர் பங்கேற்கும் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி எம்.பி. வெங்கடேசன் செய்து வருகிறார்.
இதனிடையே, ஆர்ப்பாட்டம் குறித்து எம்.பி. வெங்கடேசன் கூறுகையில், ‘‘தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. நாடு முழுவதும் அமைக்கப்படும் பிற மாநில ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளுக்கு பாஜக அரசு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜெய்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன.
மருத்துவமனை பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. அதனால், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அதுபோல், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்துகிறோம். இந்தியா முழுவதும் 27 சர்வதேச விமான நிலையங்களில் 11 விமான நிலையங்களில் பயணம் செய்த மக்களின் எண்ணிக்கை மதுரை விமான நிலையத்தில் பயணம் செய்த எண்ணிக்கையை விடக் குறைவாக உள்ளது.
மதுரையை மையமாக வைத்து சுற்றுலா வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விமானம் மூலம் மதுரையிலிருந்து பயணம் செய்கின்றனர். தென் மாவட்டங்களில் உற்பத்தியாகும் வேளாண் விளைப்பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. அதனால், சர்வதேச விமான நிலையமாக மதுரையை அறிவிப்பது காலத்தின் கட்டாயம். தேசிய மருந்து சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தையும் மதுரையில் தொடங்கிடவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் எம்.பி. மாணிக்தாகூர் மற்றும் ஏராளமான எம்.பி.க்கள், கட்சியின் மாநிலத் தலைவர்கள், நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்’’ என்று வெங்கடேசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT