Published : 04 Jan 2022 03:54 PM
Last Updated : 04 Jan 2022 03:54 PM
காரைக்கால்: புதுச்சேரி முதல்வர் தமக்குரிய அதிகாரத்தை விட்டுக்கொடுத்து, துணைநிலை ஆளுநரிடம் சரணடைந்துவிட்டார் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வி.நாராயணசாமி கூறியுள்ளார்.
காரைக்கால் மாவட்டம், விழிதியூரைச் சேர்ந்த மறைந்த திமுக நிர்வாகி ஆர்.சரவணன் உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி இன்று (ஜன.4) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது:
''புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்று 7 மாதங்களாகியும் இதுவரை காரைக்காலுக்கு வந்து மக்களைச் சந்திக்கவில்லை. அதிகாரிகளை அழைத்து திட்டங்கள் நிறைவேற்ம் குறித்தும் பேசவில்லை. மழை வெள்ளம், கரோனா உள்ளிட்டவற்றால் காரைக்கால் மக்கள் பாதிக்கப்பட்டபோதும், அதுகுறித்து சிந்திக்காமல் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு காரைக்காலைப் புறக்கணித்து வருகிறது. இதுகுறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.
தற்போது கரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சியினர், அமைப்பினர், பொதுமக்களின் எதிர்ப்பை மீறியும் புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முதல்வர் நடத்தினார். தற்போது கரோனா, ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தியிருந்தால் இதற்கு வாய்ப்பு இருந்திருக்காது. இதற்கு முதல்வர் ரங்கசாமி முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
புதுச்சேரியில் பேரிடர் மேலாண்மைத் துறைத் தலைவராக இருப்பவர் முதல்வர். அவர் இதுவரை ஒரு கூட்டத்தைக்கூட கூட்டவில்லை. மாறாக துணைநிலை ஆளுநர் அந்தக் கூட்டத்தைக் கூட்டுகிறார். முதல்வர் பொறுப்பை எப்போது துணைநிலை ஆளுநர் ஏற்றார்? அந்த அதிகாரத்தை முதல்வர் ஏன் விட்டுக்கொடுத்தார். இதற்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.
5 ஆண்டு காலம் நாங்கள் ஆட்சியிலிருந்தபோது துணைநிலை ஆளுநரின் அதிகார மீறலை எதிர்த்துப் போராடினோம். ஆனால், முதல்வர் ரங்கசாமி தமது அதிகாரத்தைத் துணைநிலை ஆளுநரிடம் விட்டுக்கொடுத்து சரணடைந்து விட்டார்.
பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான அதிகார மோதலால் புதுச்சேரியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. புதுவையில் அலங்கோலமான அரசு நடந்துவருகிறது.''
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
பேட்டியின்போது புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம்.நாகதியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT