Published : 03 Jan 2022 07:54 PM
Last Updated : 03 Jan 2022 07:54 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் தமிழக காவல் துறையின் துப்பாக்கி சுடும் பயற்சித் தளம் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 30-ம் தேதி மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், தமிழக போலீஸாரும் தனித்தனியே துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிருந்து துப்பாக்கியால் சுடப்பட்டதில், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் பாட்டி வீட்டில் இருந்த கூலித் தொழிலாளி கலைச்செல்வனின் மகன் கே.புகழேந்தியின்(11) தலையில் பாய்ந்தது. ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் சிகிச்சை பலன்றி புகழேந்தி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் குறித்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் மீது கீரனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து நார்த்தாமலை அருகே புகழேந்தியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தினால் திருச்சி, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமுவிடம் கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை கோரிக்கை மனுவை அளித்தார். அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், “துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் உண்மை மறைக்கப்படுகிறது. யாரையோ காப்பாற்றுவதற்கு காவல் துறை செயல்படுகிறது. காவல் துறையினர் உண்மையாக நடந்துகொள்ளவில்லை. தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி கிடைக்கும்வரை போராடுவோம்” என்றார்.
கோட்டாட்சியர் ஆய்வு: ஆட்சியர் கவிதா ராமு உத்தரவின் பேரில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து இலுப்பூர் கோட்டாட்சியர் எம்.எஸ்.தண்டாயுதபாணி விசாரித்து வருகிறார். இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக போலீஸார் இரு தினங்களுக்கு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். எனினும், இருவருமே தாங்கள் சிறுவனை நோக்கி துப்பாக்கியால் சுடவில்லை என்று கூறினர்.
இதைத்தொடர்ந்து, இன்று பாதிக்கப்பட்டுள்ள சிறுவனின் பெற்றோரிடம் கோட்டாட்சியர் எம்.எஸ்.தண்டாயுதாணி விசாரித்தார். அதன்பிறகு, பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் தளத்துக்கு சென்று வருவாய்த் துறை அலுவலர்களுடன் விசாரணையில் ஈடுபட்டோர். துப்பாக்கி சுடும் தளத்துக்கும், சிறுவன் இருந்த இடத்துக்கும் இடையே உள்ள தூரத்தை அளந்து கணக்கிடப்பட்டது. விசாரணை அறிக்கையை ஓரிரு நாட்களில் ஆட்சியரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT