Published : 03 Jan 2022 07:48 PM
Last Updated : 03 Jan 2022 07:48 PM
மதுரை: மதுரையைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் எழுதிய ஆங்கில இலக்கணப் புத்தகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுப் பாராட்டினார்.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ரா.அறிவுச்செல்வம் - இந்துலெட்சுமி ஆகியோரின் மகன்கிருஷ்ணா என்ற ராமசாமி (13). இவர் மதுரை வீரபாஞ்சான் லட்சுமி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் ராமசாமியின் பேரன் ஆவார். இவரது பேரன் ராமசாமி எழுதிய ‘கிருஷ்ணாஸ் தி கிராம்மர்’ என்ற புத்தகத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து மாணவர் கிருஷ்ணா என்ற ராமசாமி கூறியதாவது: ''மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணம் என்றால் பொதுவாக பயம், தயக்கம் இருக்கும். அந்தபயத்தைப் போக்கும் வகையில் எளிதாக புரியும் வகையில் ஆங்கில இலக்கணப் புத்தகம் எழுதியுள்ளேன். என்னை மாதிரி சிறுவர்கள் புத்தகங்களைப் படிப்பதோடு புத்தகங்கள் எழுதவேண்டும் என்ற உத்வேகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். அவர் எனது புத்தகத்தை வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்தாண்டு கரோனா ஊடரங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்பில் படித்துக்கொண்டே புத்தகம் எழுதினேன். 2021 ஏப்ரலில் எழுதத் துவங்கி, அக்டோபரில் எழுதி முடித்தேன். நவம்பர், டிசம்பரில் புத்தகம் தயாரிப்பு பணி நடந்தது. டிச.28ல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தினார். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனது முதல் புத்தகம், முதல்வர் அளித்த ஊக்கத்தால் மாணவர்களுக்கு பயனுள்ள பல புத்தகங்கள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது.
என்னைப் போன்ற மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்க வேண்டும். எனது தாத்தா, தந்தை ஆகியோர் அளித்த ஊக்கத்தால் இப்புத்தகத்தை நான் எழுதியுள்ளேன். எனது தாத்தா ராமசாமி, நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT