Published : 03 Jan 2022 06:51 PM
Last Updated : 03 Jan 2022 06:51 PM
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடிப் பொதுத்தேர்வு நடை பெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்கள் மட்டும் நேரடி வகுப்புக்கு வரலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் இன்று அவர் கூறும்போது, “15 - 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவரும் நிலையில் இவ்வாண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நேரடிப் பொதுத்தேர்வு நடைபெறும். இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு 1.70 லட்சம் மையங்கள் தேவை. இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும்” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,34,175 சிறார்களுக்கு கரோனா கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 22,310 சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் 4 ,601 சிறார்களுக்கே இன்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி 33 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT