Published : 03 Jan 2022 06:37 PM
Last Updated : 03 Jan 2022 06:37 PM
சென்னை: நாளை மறுநாள் கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாளை மறுநாள் (ஜனவரி 5-ல்) கோட்டையில் நடைபெறுவதாக இருந்த சட்டப்பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இதுகுறித்த விவரங்களைத் தெரிவித்தார்.
கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அப்பாவு பதிலளித்துக் கூறியதாவது:
''தமிழகத்தில் 1 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகளை இன்று முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். கரோனா எவ்வளவு வேகமாக வந்தாலும் அதைக் கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதற்கான மருத்துவர்கள், மருத்துவமனையில் படுக்கை வசதிகள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால் யாரும் பயப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை.
முதல்வரும் முன்னெச்சரிக்கையோடு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற இருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை சமூக இடைவெளிவிட்டு கலைவாணர் அரங்கத்தில் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு எல்லா கோரிக்கைகளும் எப்படி நடந்ததோ அதே நடைமுறையில் இந்த ஆண்டும் நடைபெறும். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பாக நடைபெறும்''.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளார்களா?
அனைவரும் 2 தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பத்திரிகையாளர்கள் உட்பட அனைவரும் இப்போதும் ஆர்டிபிசிஆர் சோதனை செய்து அதற்கான சான்றிதழ் வாங்கியவர்களுக்கு மட்டும்தான் அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.
கடந்த ஆண்டு ஆளுநர் உரை மானிட்டர் வைத்து நடத்தியதுபோல இந்த ஆண்டும் நடைபெறுமா?
முதல்வர் கடந்த ஆண்டே அறிவித்ததுபோல காகிதமில்லா பட்ஜெட்தான். இனிமேல் சட்டப்பேரவை நடவடிக்கைகள் அனைத்தும் காகிதமில்லா கூட்டத்தொடர்தான்.
புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் எப்படியிருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
அனைத்து ஆளுநர்களும் எப்படி பட்ஜெட் உரையை எப்படி சிறப்பாக நடத்துகிறார்களோ அதைவிட சிறப்பாக இப்போது வந்திருக்கக்கூடிய ஆளுநர் நடத்துவார் என்பது அனைவரும் அறிந்ததே. அதையே நாங்கள் நம்புகிறோம்.
தாங்களே நேரில் சென்றுதானே அழைப்பு விடுத்தீர்கள்?
அது ஆண்டுதோறும் நடக்கும் நடைமுறைதானே. தொன்றுதொட்டு ஆளுநர் நமது சட்டப்பேரவையில் உரையாற்ற வருவதற்காக முன்னதாக ஓரிரு நாட்களில் சட்டப்பேரவைத் தலைவரும், சட்டப்பேரவைச் செயலரும் சென்று நமது தமிழகத்தின் மரபுப்படி ஆளுநரை வரவேற்பது மரபு. அந்த அடிப்படையில் ஆளுநரை நேரில் சென்று அழைத்துள்ளோம். கூட்டத்தொடரில் பங்கேற்க வருவதற்கு ஆளுநரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
கூட்டம் எத்தனை நாள் நடைபெறும்?
அது முடிவான உடனே முதலில் உங்களுக்கத்தான் தெரிவிப்போம்.
இந்தக் கூட்டத்தொடரிலேயே சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை சாத்தியப்படுமா?
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சட்டப்பேரவையை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு முன்கூட்டியே ஏதாவது கோரிக்கை வைக்கிறீர்களா?
சட்டடப்பேரவையை சுமுகமாக நடத்துவதற்கு எல்லா ஒத்துழைப்பும் எதிர்க்கட்சியினர் தருகிறார்கள். ஏற்கெனவே நடந்து முடிந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லாரும் சட்டப்பேரவைச் செயல்பாட்டை மிகவும் பாராட்டியிருக்கிறார்கள். அதற்கு எந்தவிதமான அச்சமும் தேவையில்லை. கடந்த ஆண்டு எப்படி ஒத்துழைப்பு தந்தார்களோ அதேபோலத் தருவார்கள். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT