Published : 03 Jan 2022 02:41 PM
Last Updated : 03 Jan 2022 02:41 PM
சென்னை: கரோனாவைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணியாதவர்களுக்குத் தயக்கமின்றி அபராதம் விதிக்கும்படி மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கரோனா மூன்றாவது அலை சுனாமி வேகத்தில் பரவி வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் மீண்டும் கரோனா அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. தமிழகத்தில் நேற்று 1,594 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கரோனா முதல் அலை, இரண்டாவது அலை காலகட்டத்தில் கரோனா விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த அபராதங்களில் சில தளர்வுகள் காட்டப்பட்டு வந்த நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கரோனாவைக் கட்டுப்படுத்த மக்களுடைய ஒத்துழைப்பு அவசியம் என்பதால் அவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அரசு வலியுறுத்தி வருகிறது. வரும் 10-ம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கரோனா விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு கரோனா விதிகளை வலியுறுத்தி அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
''கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கட்டாய முகக்கவசம், சமூக இடைவெளி பின்பறற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம், தனி மனித இடைவெளி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதை மீறும் நபர்களுக்கு, அதாவது முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதவர்களுக்குத் தயக்கமின்றி அபராதம் வசூலிக்க அறிவுறுத்தப்படுகிறது''.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT