Published : 03 Jan 2022 11:03 AM
Last Updated : 03 Jan 2022 11:03 AM
சென்னை: தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், ஒமைக்ரான் பரவலால் நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
மத்திய அரசின் அறிவிப்புக்கு இணங்க இன்று (ஜன.3) முதல் நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பணியைத் தொடங்கிவைத்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.
தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடையோரின் எண்ணிக்கை 33 லட்சம். இவர்களில் 27 லட்சம் பேர் பள்ளியில் பயில்வதால் அவர்கள் அனைவருக்கும் பள்ளிகளிலேயே பெற்றோரின் அனுமதியுடன் தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இன்று சென்னையில் முதல்வர் சிறாருக்கான தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கிவைத்ததையடுத்து மாநிலம் முழுவதும் சிறாருக்கான தடுப்பூசித் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
திட்டத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "கரோனா 2வது அலையின்போது அரசு தீவிர நடவடிக்கை எடுத்து அதன் வீரியத்தைக் குறைத்தது. தொற்றின் தாக்கத்திலிருந்து மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இவ்வாறாக ஒரு பெருமூச்சுவிட்ட நிலையில் ஒமைக்ரான் தொற்று நம்மை மிரட்டத் தொடங்கியுள்ளது. உருமாறியுள்ள ஒமைக்ரான் வைரஸின் பாதிப்பு குறைவு என்பது ஆறுதலான விஷயமென்றாலும் கூட அது பரவும் வேகம் அச்சுறுத்துகிறது. இனி வரும் நாட்களில் தமிழகத்திலும் நிச்சயமாக ஒமைக்ரான் அதிகமாகப் பரவப்போகிறது. எனவே நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் தான் கரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய கேடயம். ஆகவே முகக்கவசம் இல்லாமல் வெளியில் செல்லக்கூடாது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம். அதேபோல் சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். மூன்றாவதாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 60 வயதுக்கும் மேற்பட்டோர் யாரேனும் இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் உடனடியாக செலுத்திக் கொள்ளவும். இரண்டு டோஸும் முழுமையாக செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ளுங்கள். இதை நான் உங்கள் வீட்டுப் பிள்ளையாக மன்றாடிக் கேட்கிறேன். இருகை இணைந்தால் தான் ஓசை வரும். மக்கள் ஒத்துழைப்புடன் தான் கரோனாவை எதிர்கொள்ள முடியும் "
இவ்வாறாக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதுடையோருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அதிகாரிகள் ஜெ.ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT