Published : 03 Jan 2022 11:09 AM
Last Updated : 03 Jan 2022 11:09 AM
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் நலனை காத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"தமிழகத்தில் விவசாயிகள் விளைவித்த நெல் உள்ளிட்ட சம்பா பயிர்கள் மழையால் வீணாகி விட்டது மிகவும் கவலைக்குரியது. டெல்டா மாவட்டங்களில் புதுக்கோட்டை, தஞ்சைசாவூர், திருவாரூர், அரியலூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையில் மூழ்கி வீணாகிவிட்டது. இதனால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியிருக்கிறார்கள்.
ஏற்கெனவே குறுவை சாகுபடியும் பாதிப்படைந்து பெருத்த நஷ்டத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு சம்பா சாகுபடியும் நஷ்டத்தை கொடுத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு பொருளாதாரம் இருக்காது. மாநிலத்தில் ஆங்காங்கே பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கின்ற வேளையில் மழைநீரினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் சேதமடைந்து, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சில இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில், சேமிப்பு கிடங்குகளில் இருந்த நெல் மூட்டைகளும் தற்போதைய மழையில் நனைந்து வீணாகிவிட்டது. விளைநிலங்களில் பயிரிடப்பட்ட நெல் விற்பனை செய்யப்படும் வரை விவசாயிகளும், விவசாயக் கூலித்தொழிலாளர்களும் கடுமையாக உழைக்கிறார்கள். ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோன்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை திறந்த வெளியில் அடுக்கி வைப்பதும், மழைக்காலத்தில் நெல் மூட்டைகளை பாதுகாக்க தவறுவதும் தொடர்கிறது.
இந்நிலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கூடுதல் இட வசதி செய்து தர வேண்டும், நெல்மூட்டைகளைப் பாதுகாக்க தேவையான உபகரணங்கள் இருப்பில் இருக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே தமிழக அரசு, மாநிலம் முழுவதும் மழையால் சேதமடைந்துள்ள சம்பா பயிர்களை ஆய்வு செய்து, நிவாரணத் தொகை வழங்கவும், நெல் சேமிப்பு கிடங்குகளில் நெல்லை கொள்முதல் செய்யும் வரை நெல் மூட்டைகளை முறையாக தார்ப்பாய் போர்த்தி பாதுகாக்கவும், நெல்லுக்கு உரிய விலை உடனடியாக கொடுக்கவும் தொடர் நடவடிக்கை எடுத்து விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் நலன் காத்திட வேண்டும் என்று தமாகா சார்பில் வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT