Published : 03 Jan 2022 08:47 AM
Last Updated : 03 Jan 2022 08:47 AM
சென்னை: காவிரி டெல்டாவில் பருவம் தவறிய மழையால் ஏற்பட்ட நெற்பயிர்கள் சேதத்தை தமிழக அரசின் அமைச்சர்களோ, அதிகாரிகளோ இதுவரை பார்வையிடாதது ஏன்? என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை தமிழக அரசின் அமைச்சர்களோ, அதிகாரிகளோ இதுவரை பார்வையிடாதது ஏன்? கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அப்போது அமைக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் குழு என்ன ஆயிற்று?
அவர்கள் அறிக்கை அளித்தார்களா?அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா?இப்போது நெற்கதிர் முற்றி வரும் நேரத்தில் டெல்டா பகுதியில் பெய்த திடீர் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் பாழாகி இருக்கின்றனவே,இதற்காவது தமிழக அரசு ஏதாவது செய்யுமா?
மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து தேவையான இழப்பீட்டை பெற்றிடுமா? இல்லை; பெயரளவுக்கு "நான் டெல்டாவைச் சேர்ந்தவன்" என்று சொல்லியே முதலமைச்சர் ஸ்டாலின் காவிரி பாசன விவசாயிகளை வழக்கம்போல ஏமாற்றப் போகிறாரா?" என்று பதிவிட்டுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்த பருவம் தவறிய மழையால் அறுவடைக்காகக் காத்திருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
நடப்பாண்டின் சம்பா பருவத்தில் மட்டும் காவிரி பாசன மாவட்டங்கள் மூன்றாவது முறையாக மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் சுமார் பத்து லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பருவ நெல் பயிரிடப்பட்டிருந்தது. அவற்றில் கணிசமான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆனால், கடந்த இரு நாட்களாக பெய்த மழையில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலாக பரப்பளவிலான சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து விட்டது.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்,
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT