Published : 03 Jan 2022 08:45 AM
Last Updated : 03 Jan 2022 08:45 AM

மாவட்டங்களில் தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம்; திண்டுக்கல் அருகே துண்டிக்கப்பட்ட சாலை: ராமேசுவரம் கோயிலில் தேங்கிய மழை நீர்

ராமநாதபுரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் திண்டுக்கல் அருகே சாலை துண்டிக்கப்பட்டது. ராமேசுவரத்தில் பெய்த மழையால் கோயிலில் மழைநீர் தேங்கியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த வெள்ளி, சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது. இதனால் திண்டுக்கல் அருகே உள்ள நல்லாம்பட்டி ஆசாரிகுளம் நிரம்பி ஒத்தக்கண் பாலம் வழியாக தண்ணீர் வெளியேறியது.

மேலும் திண்டுக்கல் நகர் பகுதியான பாரதிபுரம், திருமலைசாமிபுரம் உள்ளிட்ட குடியிருப்புகளை நேற்று அதிகாலை தண்ணீர் சூழ்ந்தது.

ஒத்தக்கண் பாலப் பகுதியில் அதிக தண்ணீர் வெளியேறியதால், திண்டுக்கல்-வேடபட்டி சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் வேடபட்டி, யாகப்பன்பட்டி, நரசிங்கபுரம், வெள்ளோடு ஆகிய பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

திண்டுக்கல் அருகே பள்ளபட்டி ஊராட்சி, பொன்மாந்துரை, புதுப்பட்டி கிராமங்களுக்கு அருகேயுள்ள மூங்கில்குளம் ஏற்கெனவே நிரம்பிய நிலையில், கூடுதல் நீர்வரத்தால் மூங்கில்குளம் உடைந்து, பொன்மாந்துரை கிராமக் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்தது.

மழைநீருடன் தோல் தொழிற்சாலை கழிவு நீரும் வீடுகளுக்குள் புகுந்ததால் ஊர் முழுவதும் துர்நாற்றம் வீசியது. மழை நீரை வெளியேற்றக் கோரி, பள்ளப்பட்டி ஊராட்சி மக்கள் வத்தலகுண்டு சாலையில் சிறிது நேரம் மறியல் செய்தனர்.

திண்டுக்கல் புறவழிச்சாலை அருகே சர்வீஸ் சாலையில் குளத்தில் இருந்து வெளியேறிய நீர் சூழ்ந்ததால் நேற்று அதிகாலை வத்தலகுண்டு சென்ற கார் ஒன்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டது. காரில் பயணம் செய்த 4 பேர் உடனடியாக இறங்கி தப்பினர்.

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டம் முழு வதும் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் பலத்த மழை பெய்தது. இதனால் ராமேசுவரத்தில் தெருக்களிலும், ராமநாத சுவாமி கோயில் முன் நுழைவு மண்டபம் மற்றும் கொடிமரம் வரையும் மழை நீர் தேங்கியது.

நேற்று அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். மழைநீரில் நடந்து செல்ல பக்தர்கள் சிரமம் அடைந்தனர். கோயில் பணியாளர்கள் மழை நீரை வெளியேற்றினர்.

சிவகங்கை

16 ஆண்டு களுக்குப் பிறகு கடந்த நவ.25-ல் சிங்கம்புணரி பகுதியில் ஓடும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

டிச.6-ல் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு செந்துறை, நத்தம், சிங்கம் புணரி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சிங்கம்புணரியில் மட்டும் 101.60 மி.மீ. மழை பதிவானது. நேற்று காலை திடீரென பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி வட்டாரத்தில் கடந்த மாதம் பெய்த மழையால், பல நூறு ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதில் தப்பிய நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்குத் தயாராக இருந்தன. இந்நிலையில், சில நாட்களாக அப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது.

ஏற்கெனவே கேசனி, சிறுவாச்சி, ஆனையடி, கீழப்புதுக்குடி, மேலப்புதுக்குடி, தேரளப்பூர், மித்ரா வயல், மொன்னானி, கொடூர், பெருங்கானூர், குடிக்காடு உள்ளிட பகுதிகளில் கண்மாய்கள் நிரம்பிய நிலையில், மழைநீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது.

இதனால் அப்பகுதியில் பல நூறு ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. மேலும் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை உள்ளதால் நெற்பயிர்கள் அழுகும்நிலை ஏற்பட்டுள்ளது.

வடகீழ்குடி கண்மாய் நீரால் கேசனி விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x