Published : 02 Jan 2022 07:30 PM
Last Updated : 02 Jan 2022 07:30 PM
புதுக்கோட்டை: அரசு வேலைவாய்ப்புத் துறை மூலம் போட்டித் தேர்வு மையம் நடத்தி அரசு வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு புதுக்கோட்டை மாவட்டம் முன்னோடியாக திகழ்ந்துள்ளது என ஓய்வு பெற்ற வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மண்டல இணை இயக்குநர் ப.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மன்னர் அரசு கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டு மையம், தன்னார்வ பயிலும் வட்ட அறக்கட்டளை சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சியின் தொடக்க விழா இன்று (ஜன.2) நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சி.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மண்டல இணை இயக்குநர் ப.சுரேஷ்குமார் பேசியது:
புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலராக நான் பணியாற்றியபோது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எப்போது அரசு வேலை கிடைக்கும் என தினசரி வந்து கேட்பதுண்டு.
இவ்வாறு கேட்போரில் போட்டித் தேர்வு எழுத விருப்பம் உள்ளோரை தேர்வு செய்து, தனியார் இடத்தில் கடந்த 1994-ல் தன்னார்வ பயிலும் வட்டம் எனும் ஒரு இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இங்கு படித்தோரில் பெரும்பாலானோர் படிப்படியாக போட்டித் தேர்வுகள் மூலம் அரசு வேலைக்கு சென்றதால் இம்மையத்தில் படிப்பதற்கு ஏராளமானோர் வரத்தொடங்கினர். அப்போது, இம்மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த தமிழக அரசு, பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் தன்னார்வ பயிலும் வட்டத்தை தொடங்கியது. இந்த மையமானது தமிழகம் முழுவதும் உயிரோட்டமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா மாநிலத்திலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. பிற மாவட்டங்கள், மாநிலத்துக்கு அரசு வேலை வாய்ப்புக்கு வழிகாட்டியாக புதுக்கோட்டை இருந்தது.
தற்போது அரசுப் பணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனால், போட்டிகளோ பலமாக உள்ளது. அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்களின் எண்னிக்கைக்கும், விண்ணப்பிப்போரின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பார்த்து மனம் தளரவேண்டியதில்லை. போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போரெல்லாம் போட்டியாளர்களல்ல.
தொடர் பயிற்சியும், முயற்சியும் செய்வோருக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. எனவே, அனுபவசாலிகளைக் கொண்டு தொடர்ந்து அளிக்கப்படும் இந்த இலவச பயிற்சிகளை விடுப்பெடுக்காமல், முழு அக்கறையோடு வந்து படித்தால் வெற்றி எளிதாகும். இங்கு வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு துறையின் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பெ.வேல்முருகன், வருமான வரித்துறை அலுவலர் இரா.சுரேஷ்குமார், உதவி கருவூல அலுவலர் த.புவனேஸ்வரன் ஆகியோர் தன்னார் பயிலும் வட்டத்தில் பயின்று போட்டித் தேர்வு மூலம் தேர்வாகிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். பயிற்சியை கல்லூரியின் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய பொறுப்பாளர் சு.கணேசன் ஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்ச்சியில், 350-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக சென்னை மாநகராட்சி ஆய்வாளர் (தணிக்கை) பா.சீனிவாசன் வரவேற்றார். தனி வட்டாட்சியர் (பறக்கும்படை) அ.சோனை கருப்பையா நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT