Published : 02 Jan 2022 05:23 PM
Last Updated : 02 Jan 2022 05:23 PM

புத்தாண்டில் பைக் சாகசம்; சென்னை இசிஆர் சாலை சம்பவம் வைரலான வீடியோ: இளைஞர் கைது

வலைதளங்களில் வைரலான புத்தாண்டு இரவு சென்னை இசிஆர் சாலை பைக் சாகசம்.

சென்னை: புத்தாண்டு இரவில் சென்னை இசிஆர் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் பயன்படுத்திய இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த சென்னை காவல்துறை, பைக்கில் வேகமாக செல்லுதல், மதுபானங்களை அருந்திவிட்டு பைக் ஓட்டுதல் முதலியவற்றிற்கும் தடை விதித்திருந்தது. வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே அனுமதி மறுப்பு காரணமாக மெரினா கடற்கரையில் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

மேலும் அன்று சென்னை மாநகரம் கடும் மழையைச் சந்தித்த காரணத்தாலும், விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருந்த காரணத்தாலும் சாதாரணமாகவே புத்தாண்டு கொண்டாட்டம் பொலிவிழந்திருந்தது.

ஆனால் கட்டுப்பாடுகளையும் மீறி இளைஞர்கள் சிலர் சென்னை கடற்கரை சாலையில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு ஆட்டம்போட்டது சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை வைத்து போலீஸார் அதில் யார்யாரெல்லாம் ஈடுபட்டனர் என்பதை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம், பிராத்தனா தியேட்டர் பகுதிகளில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டது சிசிடிவி கேமராக்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதில் நண்பர்கள் வேறுவேறு வண்டிகளில் பின்தொடர மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்ற இளைஞர் திடீரென பைக்கின் முன் சக்கரத்தை பல அடி உயரத்துக்கு தூக்கி சாகச வித்தையில் ஈடுபடுவதை காணமுடிகிறது. அந்தக் காட்சிகள் வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன.

இதுகுறித்து அடையாறு போக்குவரத்து போலீஸார் விசாரணை செய்தனர். சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தனர்.

அப்போது பைக் சாகசத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் எண் கண்டுபிடிக்கப்பட்டது. மோட்டார்பைக்குக்கு சொந்தமானவரை தேடிய போலீஸார் விஜயன் என்பவர்தான் இந்த அபாயகரமான சாகசங்களில் ஈடுபட்டவர் என்பதை கண்டுபிடித்தனர்.

இதனைஅடுத்து அவரை கைது செய்த போலீஸார் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x