Published : 02 Jan 2022 04:30 PM
Last Updated : 02 Jan 2022 04:30 PM
புதுச்சேரி; புதுச்சேரி மாநில அந்தஸ்து சம்பந்தமாக நாங்கள் எதுவும் முடிவு எடுக்க முடியாது என புதுவையின் பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் இன்று (ஜன். 2) கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ. சரவணன்குமார், செல்வகணபதி எம்பி மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிககள் உடனிருந்தனர்.
பாஜக தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுச்சேரியில் பாஜக சார்பில் வருகிற 9, 10, 11 ஆகிய தேதிகளில் பிரம்மாண்டமாக பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளது. நலிந்த கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக ரூ.5 லட்சத்துக்கு பரிசுகள் வழங்கவுள்ளோம்.
அதேபோல், கபடி போட்டியை எல்லா மட்டத்திலும் கொண்டு செல்ல உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பாஜக சார்பில் இந்த பொங்கல் விழா தொடர்ந்து நடத்த வேண்டும் என்று பொறுப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். நம்முடைய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 30 தொகுதியையும் இணைத்து லாஸ்பேட்டை ஏர்போர்ட் மைதானத்தில் 12-ம் தேதி மாலை பொங்கல் வைப்பது, கோலாப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது என்று திட்டமிட்டுள்ளோம்.
ஏற்கெனவே மாநில அளவிலான 'நமோ' கிரிக்கெட் போட்டி தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் விழாவையொட்டி தொகுதிவாரியாக கோலாப்போட்டி, உறியடி மற்றும் பெண்களுக்கான விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும்.
ஜல்லிக்கட்டுக்கு பாஜகவின் முழு ஆதரவு உண்டு. புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பேசி முடிவு செய்வோம். புதுச்சேரி மாநில அந்தஸ்து சம்பந்தமாக நாங்கள் எதுவும் முடிவு எடுக்க முடியாது. தேசிய தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சருடன் ஆலோசனை செய்த பிறகே மாநில அந்தஸ்து குறித்து நாங்கள் கருத்து கூற முடியும். மாநில மக்களுக்கு எந்த வகையில் நன்மை உள்ளதோ, அதன் அடிப்படையில் செயல்படுவோம். மாநில தனி கணக்கை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT